கன்னியாகுமரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பச்சைமால் தலைமையில் நவம்பர் 5 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதேபோல இன்னும் பல மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் சேருவார்கள் என்று அதிமுகவினர் சொல்லிக் கொண்டிருக்கையில், இந்த வரிசையில் அடுத்த அட்டாக் சேலம் மாவட்ட அமமுகவாக இருக்கலாம் என்ற தகவல் அதிமுகவில் இருந்து கிடைக்கிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
“உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே அமமுக நிர்வாகிகளை பல மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடியின் உத்தரவு. அந்த வகையில் சேலம் மாவட்ட அமமுக நிர்வாகிகளை இழுக்கும் பணியை செம்மலை தொடங்கிவிட்டார். மாவட்டத்தின் முக்கிய அமமுக நிர்வாகிகளுடன் செம்மலை பேசிவருகிறார். புகழேந்திதான் இரு தரப்புக்கும் பாலமாக இருக்கிறார். அமமுகவில் இருக்கும் வன்னியர் பிரமுகர்களை அதிமுகவுக்கு மீண்டும் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்போது பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அமமுகவின் அணிகள் உட்பட பல நிர்வாகிகள் குமரியைப் போலவே முதல்வர் முன்னிலையில் அதிமுகவுக்கு வருவார்கள்” என்றனர்.
இதுகுறித்து மின்னம்பலம் சார்பில் சேலம் புறநகர் மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.கே. செல்வத்திடமே பேசினோம்.
“சேலம் மாவட்டத்தில் அமமுக மிக உறுதியாக இருக்கிறது. நாங்கள் நல்ல உற்சாகத்தோடு இருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே அமமுக மிக உறுதியாக இருப்பது சேலம் மாவட்டத்தில்தான். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் பி.ஆர்.ஓ.க்கள் மூலமாக மீடியாக்களிடம் கட்டுக்கதைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பதவியில் இருக்கும் வரை அரசியல் பிழைப்பை ஒட்டிவிட்டு அவர்கள் போக வேண்டியதுதான். இனிமேல் மக்களிடம் அவர்கள் செல்ல முடியாது. அதனால்தான் அமமுகவில் இருந்து அவர் வருகிறார், இவர் வருகிறார் என்று பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அங்கே இருப்பவர்கள் துரோகிகள் என்றுதான் நாங்கள் வெளியே வந்து சாருடன் (டிடிவி தினகரன்) இருக்கிறோம். அப்புறம் எதற்கு நாங்கள் அங்கே போக வேண்டும்? அவர்கள் எங்களுடன் வராமல் இருந்தால் சரி” என்றவர்,
“புகழேந்தியை சார் மீடியாவில் உட்கார வைத்து கருத்து சொல்லச் சொன்னதால்தான் அவரை ஓரளவுக்காவது தெரிந்திருக்கிறது. இல்லையென்றால் அவரையெல்லாம் யாருக்குத் தெரியும். அவரெல்லாம் எங்கள் யாருடனும் பேசவில்லை. அமமுக தொண்டன் யாராவது இணைப்பு என்று சொல்லியிருக்கிறானா? ஒரு ஆள் சொல்லியிருக்கிறானா? இணைப்பு என்ற வசனத்தை சொல்லிக்கொண்டிருப்பவன் எல்லாம் அதிமுகவில் இருப்பவன் தான். அதிலும் பதவியில் இருப்பவர்கள்தான் ஆதாயத்தை எதிர்பார்த்து இந்த வசனத்தை விட்டுக் கொண்டிருக்கிறான். எல்லாம் ஏமாற்று வேலை. கொடி அவர்களிடம் இருக்கு, ஆட்சி அவர்களிடம் இருக்கு, சின்னம் அவர்களிடம் இருக்கு, அதிகாரம் அவர்களிடம் இருக்கு. அப்புறம் எங்களை ஏன் சார் வந்து தொங்கறாங்க? நாங்கள் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார் எஸ்.கே. செல்வம்.�,