டிஜிட்டல் திண்ணை: குட்கா மூலம் தமிழகத்தைக் குறிவைக்கும் அமித் ஷா

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் ஆன்லைனில் இருந்தது.

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி, அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டு அரசியலில் இப்போது முக்கியத்துவம் பெற்றிருப்பது குட்கா ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தான்.

தமிழ்நாட்டு அரசியலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக குலுக்கி வரும் விவகாரம் குட்கா. தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படவும் விநியோகிக்கப்படவும் காரணமாக இருந்த மத்திய கலால் துறை அதிகாரிகள்,தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணையை ஏற்கனவே தொடங்கியது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக பெயர் குறிப்பிடப்படாத மத்திய மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத் துறை எஃப் ஐ ஆர் பதிவு செய்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ரமணா, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகள் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்த நிலையில்தான்… இப்போது முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரனுக்கு குற்ற வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா விவகாரம் சற்றேறக்குறைய முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவின் அடுத்த பார்வை தமிழ்நாட்டின் மீது விழுந்திருக்கிறது. அதன் முதல் அறிகுறிதான் குட்கா விஷயத்தில் மத்திய அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது.

ராஜேந்திரனுக்கு அனுப்பப்பட்ட சம்மன், அவரிடம் நடத்தப்படும் விசாரணை இதன் மூலமாக இந்த அதிமுக அரசாங்கத்தின் முக்கியமானவர்களை அசைத்துப் பார்க்கின்ற ஒரு துருப்புச் சீட்டாக விவகாரம் இருக்கப் போகிறது என்கிறார்கள் டெல்லியின் நடவடிக்கைகளை உற்று நோக்கியவர்கள்.

மகாராஷ்டிராவை அடுத்து ஆந்திரா பிறகு தமிழ்நாடு என்பதுதான் அமித்ஷாவின் திட்டம். ஆந்திராவில் சின்னப்பையன் ஜெகன்மோகன் ரெட்டி இப்போதுதான் ஆட்சி அமைத்திருக்கிறார் அவரை பிறகு பார்த்துக் கொள்வோம் என்று மோடி கூறிய போது கூட, அரசியலில் சின்னவன் பெரியவன் என்று பார்க்கக்கூடாது என்று மோடிக்கு பதில் அளித்துவிட்டு ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் அடுத்தடுத்து தனது அரசியல் அதிரடிகளை அரங்கேற்ற தயாராகிவிட்டார் அமித்ஷா.

தமிழ்நாட்டில் குட்கா விவகாரத்தில் அதிமுக மீதான பிடி இறுகியிருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜை டேமேஜ் ஆக்கும் அனைத்து முயற்சிகளும் வேகவேகமாக நடந்து வருகின்றன. பஞ்சமி நிலம், மிசா இவற்றையெல்லாம் தாண்டி ஸ்டாலினின் பழைய வெளிநாட்டு பயண புகைப்படங்களையும் மத்திய அரசு வட்டாரத்தில் சேகரித்து வைத்திருப்பதாக உள்ளே உள்ளவர்கள் கூறுகிறார்கள். இவற்றின் மூலம் அடுத்த சில மாதங்களில் தமிழ்நாடு இந்திய அளவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கும் என்கிறார்கள் அவர்கள்” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share