நாட்டில் 15 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல் ரீதியான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த நான்கு வாரங்களில் ஆசியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 7.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில் 38% பாதிப்பு ஐரோப்பாவில் மட்டும் பதிவாகிறது. அதுபோன்று இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு புதிய எழுச்சியை கண்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளன. இந்த மாநிலங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரக் குழுக்களை அனுப்பி உள்ளோம்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் 30, 2021 ஆண்டில் 3,86,452 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் உயிரிழந்தனர். 31 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, 3,17,532 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 380 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 19,24,051 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் மூன்றாவது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதற்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான் காரணம். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை ” என்று கூறினார்.
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி குறித்து பேசிய அவர்,”இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அதேசமயம் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 52 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இன்னும் நாட்டில் 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அதற்கான அறிவியல் ரீதியாக சான்றுகள் கிடைக்கும்போது, தடுப்பூசியின் கவரேஜை விரிவுபடுத்துவோம். அதுகுறித்து அறிவியல் தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்போம்” என்று கூறினார்.
**-வினிதா**
�,