ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்!

Published On:

| By Balaji

ஆன்லைனில் வகுப்புகள் நடத்திவிட்டு நேரடி முறையில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் பள்ளி,கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், நேரடிமுறையில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இன்று(நவம்பர் 15) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட மாணவர்கள், அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆன்லைனில் பாடம் நடத்திவிட்டுத் தேர்வுகளை மட்டும் நேரடியாக வைப்பதை ஏற்க முடியாது என கோஷங்களை எழுப்பினர். இதனால், மாவட்ட ஆட்சியர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து,” நேரடி தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தித் தேர்வுகளை எப்படி நடத்துவது என முடிவு எடுப்போம்” என்று அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இதை ஏற்காத மாணவர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் கூறுகையில், “தேர்வுகளை நேரடிமுறையில் வைத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும். தினந்தோறும் வகுப்புக்கு சென்றபோதே பாதி மாணவர்கள் தேர்ச்சி அடைவதில்லை. அதில், ஆன்லைனில் வகுப்புகளை கவனித்து எப்படி தேர்ச்சி பெற முடியும். சரியான புத்தக வசதி இல்லை. அதுமட்டுமில்லாமல், ஆன்லைன் வகுப்பு எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்மூலம் எப்படி தேர்வுகளை நேரடியாக எழுத முடியும். இந்தியாவின் இரண்டு, மூன்று மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, தமிழ்நாட்டிலும் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும். தேர்வு நெருங்கிவிட்டது, அதனால்தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இது ஒரு முன்னெடுப்புதான்…எங்களது கோரிக்கை ஏற்கபடாவிட்டால், தமிழ்நாடு தழுவிய போராட்டத்தையும் நடத்துவோம். இது தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கையாகும்” என்று கூறினார்.

தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆன்லைனில் தேர்வுகள் நடப்பதால், மாணவர்கள் படிக்காமலேயே எளிதாக தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற கருத்து நிலவி வருகிற நிலையில், மாணவர்களின் இந்த போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share