Lசூப்பர் ஹீரோ பரிசளித்த ”கை”!

Published On:

| By Balaji

ஸ்டார் வார்ஸ் படத்தின் ரசிகர்களுக்கு லூக் ஸ்கை வாக்கர் பாத்திரம் குறித்த அறிமுகம் தேவையில்லை. இந்த பாத்திரத்தில் நடித்திருந்த மார்க் ஹாமிற்கு செயற்கை ரோபோ கைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தற்போது ஸ்டார் வார்ஸ் பட வரிசைகளின் ரசிகையான 11 வயது பெல்லா டாட்லாக் என்னும் ப்ளோரிடாவை சேர்ந்த சிறுமி, தனக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை R2-D2 பயோனிக் கைகளை, வீடியோ அழைப்பின் மூலம் மார்க் ஹாமிலிடம் காட்டி மகிழ்ந்திருக்கிறார்.

பெல்லாவுக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டதில் மார்க் ஹாமிலின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். கடந்த வருடம், விலை மிகவும் அதிகமான இந்த செயற்கை கைகளைப் பெற உதவுமாறு அனைவரிடத்திலும் பெல்லா நிதியுதவி கேட்டிருந்தார்.. இதுகுறித்து, 3.6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள தன் ட்விட்டர் பக்கத்தில் மார்க் ஹாமில் 2019 நவம்பர் மாதம் பதிவிட 14,000 டாலர்கள் ( இந்திய மதிப்பில் கிட்டதட்ட 10 லட்ச ரூபாய் ) நிதி திரண்டது.

இதைத்தொடர்ந்து அதிநவீன செயற்கை கை அவருக்கு பொருத்தப்பட்டது. இந்நிலையில் வீடியோ அழைப்பில் அந்த கையை காட்டி பெல்லா, மார்க் ஹாமிலிடம் பேச அதற்கு மார்க் ஹாமில் மகிழ்வுடன், இது மிகவும் அற்புதம், உன்னால் இந்த கைகளை பெற்றுக்கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

பெல்லா பிறப்பிலேயே வலது கையில் விரல்கள் இல்லாமலும், இடது கை வலது கையை விட மிகவும் சிறியதுமான குறைபாட்டுடன் பிறந்தார். அறுவை சிகிச்சைகளின் மூலம் அவரின் வலது கையில் நான்கு விரல்களை உருவாக்க முடிந்தது. இடது கையில் அறுவை சிகிச்சை அற்ற ஒரு முறையை விரும்பியவருக்கு தற்போது இந்த முறை கைகொடுத்திருக்கிறது.

இதுகுறித்து பெல்லா கூறும்போது, “எனக்கு இப்போது இரண்டு கைகள் உள்ளன. எனது நண்பர்களைப் போலவே நான் இனி சைக்கிள் ஓட்ட முடியும், கைகளை மடக்கி என்னால் பொருட்களை எடுக்க முடியும், எனது கனவு நனவாகி விட்டது “ எனக்கூறியுள்ளார்.

It was wonderful talking with Bella & seeing her incredible new #R2D2HeroArm– This is what a real-life hero looks like! Thanks to @openbionics for making this happen & offering hope to so many deserving recipients. #BionicBella ♥️ https://t.co/lhOjygK0ea

— Mark Hamill (@HamillHimself) March 3, 2020

பெல்லாவின் தாய் பமீலா கூறுகையில், இந்த கை அவளது வாழ்க்கையையே மாற்றி விட்டது. பிறந்து சில வாரங்கள் இருக்கும் போது அவளைத் தத்து எடுத்துக்கொண்டேன். கடந்த சில வருடங்களில் அவள் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள் ஏராளம். தற்போது அறுவை சிகிச்சையும் வலியும் இல்லாமல் அவளுக்கு கை முழுவதுமாக கிடைத்திருக்கிறது. கைகளை உருவாக்கிய ஒப்பன் பயோனிக்ஸ் மற்றும் ஹேங்கர் மருத்துவமனைக்கு ( Open Bionics and Hanger Clinic ) நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பெல்லாவிற்கு பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன கைகளானது அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஹீரோ வகை கைகளாகும். இந்த கைகள் உடலின் தசைகளிலிருந்து சிக்னல்களை பெற்றுக்கொண்டு இயங்கும். இந்த கையை பெற்றதன் மூலம் அமெரிக்காவின் அதிநவீன செயற்கை கையை பெற்றுள்ள முதல் நபராக பெல்லா உள்ளார்.

ஒபன் பயோனிக்ஸ் நிறுவனம், ஸ்டார் வார்ஸ் படத்தயாரிப்பு நிறுவனமான லுகாஸ்பிலிம்ஸுடன், அவற்றின் டிசைன்களை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. ஸ்டார் வார்ஸ் படத்தின் பிரபல ரோபோவான R2D2 வை மாதிரியாகக் கொண்டு பெல்லாவின் கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் சக நிறுவனரான சமந்தா பெயின் ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பெல்லாவிற்கு இந்த கைகள் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மார்க் ஹாமில் பெல்லாவை போன்ற பல குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார் என கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் மார்க் ஹாமில், ஸ்டார் வார்ஸ் ரசிகர்களுக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவித்ரா குமரேசன்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share