சட்டப் படிப்பில் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் நேற்று (அக்டோபர் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுபோன்று கடந்த ஏப்ரல்-மே செமஸ்டரில் அரியர் தேர்வு எழுதத் தேர்வு கட்டணம் செலுத்திக் காத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அரியர் மாணவர்களுக்கு இன்டர்னல் மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தாக்கல் செய்த மனுவில், மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் பட்டம் வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதை விசாரித்த நீதிமன்றம் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தது.
இந்த சூழலில் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டக்கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அம்பேத்கர் பல்கலைக் கழக பதிவாளர் ஆபிரகாம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அரியர் மாணவர்களுக்கு இன்டர்னல் மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்க அகில இந்திய பார் கவுன்சில் பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே முடிவெடுக்க முடியும். எனவே பார் கவுன்சிலின் அறிவுறுத்தலின் பேரில் தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**�,