அமர்நாத் குகை அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். பனி, தீவிரவாத அச்சுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல், தமிழகம் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.
அதன்படி 2017ல் 2,60,003 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். 2018லும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். 2019ல் மூன்றரை லட்சம் பேர் தரிசனம் செய்தனர். அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. மேலும் இந்த புனித யாத்திரை அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு 6 லட்சம் முதல் 8 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்த் தெரிவித்திருந்தார். அதுபோன்று பக்தர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்து. அனந்தநாக் மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பி வந்தன.
மோசமான வானிலை காரணமாக கடந்த 7ஆம் தேதி வரை இரண்டு நாட்களாகப் புனித யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் வானிலை சரியானதையடுத்து புனித யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், அமர்நாத் குகை அருகே மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த பக்தர்கள் கூடாரங்கள் பல அடித்துச்செல்லப்பட்டன. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் மாயமான 40க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்திய ராணுவத்தினரின் ஆறு மீட்புக் குழுக்கள் மற்றும் இரண்டு மருத்துவக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. விமானப்படைக்குச் சொந்தமான MI17 ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, நிலைமை குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இன்று காலையும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அஃப்ரோசா ஷா கூறுகையில், “திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் இறந்துள்ளனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தின் இடிபாடுகளிலிருந்து ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது.” என்று தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்கள் யார்? மாயமானவர்கள் யார்? என்ற விவரவம் எதுவும் தெரியவரவில்லை. இதனால் யாத்திரை சென்றவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை பயணத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
– கிறிஸ்டோபர் ஜெமா