உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஜாம்பவானாக இருந்த உசைன் போல்ட் சாதனையை அமெரிக்க வீராங்கனை அல்லிசன் பெல்லிக்ஸ் முறியடித்துள்ளார்.
கத்தாரின் தோஹாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் 4*400 தொடர் ஓட்டத்தில் 12ஆவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் அல்லிசன் பெல்லிக்ஸ். இதன் மூலம் உசைன் போல்ட்டின் உலக சாதனையை முறியடித்துள்ளார். உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 11 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். தற்போது அதனை முறியடித்து 12ஆவது பதக்கத்தை அல்லிசன் பெல்லிக்ஸ் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து அல்லிசன் பெல்லிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் பெற்ற தங்கப்பதக்கங்களுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ”இந்த ஆண்டு நான் கடந்து வந்த அனைத்தையும் நினைவில் கொள்கிறேன். இது எல்லாவற்றையும் மீண்டும் கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உசைன் போல்ட்டின் சாதனையை இவர் முறியடித்திருந்தாலும், இந்த இடத்துக்கு பெல்லிக்ஸ் வந்தது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனது மகள் கேம்ரினை பெற்றெடுத்த 10 மாதங்களிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2000 முதல் தொடர்ந்து தங்க பதக்கத்தை வென்று வந்த பெல்லிக்ஸ், 2018 நவம்பரில் தனது மகளைப் பெற்றெடுப்பதற்கு முன்னர் preeclampsiaவால் (கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்) பாதிக்கப்பட்டிருந்தார். அவர் 32 வாரம் கர்ப்பமாக இருந்த போது உடல்நிலை பாதிப்பு காரணமாக சிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குறைமாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மட்டுமின்றி தனது உடல்நிலையும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் ஒரு முறை கூறியிருந்தார். கடந்த செப்டம்பரில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவைப் பகிர்ந்திருந்தார்.
இதுபோன்று பல சிக்கலான சூழ்நிலையில் குழந்தை பிறந்து 10 மாதத்திலேயே மீண்டும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்திருக்கிறார் அல்லிசன் பெல்லிக்ஸ்.
தற்போது அவர் 2020ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பயிற்சி பெற்று வருகிறார். ஒலிம்பிக் வரலாற்றில் வெற்றிகரமான ஒருபெண் தடகள வீரராகத் திகழ்கிறார் அல்லிசன் பெல்லிக்ஸ்.
நைக் நிறுவனத்தின் ஸ்பான்சரில் அல்லிசன் பெல்லிக்ஸ் இருந்து வந்தார். ஆனால் அவர் குழந்தை பெற்றுகொள்ள முடிவெடுத்த போது பல இன்னல்களை தாண்ட வேண்டியது இருந்தது. நைக்குடன் அவர் கையெழுத்திட்டிருந்த ஒப்பந்தபடி பெல்லிக்ஸ் குழந்தை பெற்றுகொள்ள விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு அவர் முன்பை போலவே வேகமாக ஓடவில்லை என்றால் அவரது சம்பளம் குறைக்கப்படும் என்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்தது. இதனை எதிர்த்து பெல்லிக்ஸ் நைக்கின் ஸ்பான்ஸர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். தனது புதிய ஒப்பந்தத்தின் மூலம் விளையாட்டு உலகத்தில் பெண் வீராங்கனைகள் எப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற புதிய உதாரணத்தை உருவாக்குவேன் என்றும் கூறியிருந்தார்.
�,”