கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாமா?

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதேசமயம் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் நாளன்று கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்களும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மார்ச் 3ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share