அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போது?

public

மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்று சொன்னாலே அலங்காநல்லூர்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்தாண்டு கொரோனா காரணமாக போட்டி நடக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன்,நிபந்தனைக்குட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டிக்கான முகூர்த்தக்கால் நேற்று காலை நடப்பட்டது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டில், வருகிற ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து விழா குழுவினருடன் இன்று(ஜனவரி 11) மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் மாலை ஐந்து மணி முதல் [இணையதளத்தில்](https://madurai.nic.in/)முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளை மாலை 5மணிவரை முன்பதிவு நடைபெறும். இந்தப் போட்டிகளில் பார்வையாளர்களாக உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை. மற்றபடி இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

அதுபோன்று, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஜனவரி 16ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு, 17ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி அறிவித்துள்ளார்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.