உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி போட்டியைத் தொடங்கி வைத்ததும் வாடிவாசலிலிருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஆரம்பத்தில், போட்டி சுறுசுறுப்பின்றி காணப்பட்டது. “ஏப்பா…மாட்ட புடிங்கப்பா…போர் அடிக்குதுப்பா..வீரன் யாரும் இல்லையா” என்ற ரன்னிங் கமெண்ட்ரிகள் வீரர்களை உற்சாகமடையச் செய்தது.
இதையடுத்து அவிழ்த்துவிடப்படும் காளைகளை, பிடித்தே தீருவேன் என்றபடி காளையர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.
இந்தச்சூழலில், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாடுகளை துன்புறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். தொடர்ந்து காளையர்களுக்கு அடங்காத காளைக்கும், காளைகளை அடக்கும் காளையர்களுக்கும் பரிசாக தங்கக் காசுகளை அறிவித்து வருகின்றனர். அதுபோன்று மாட்டின் மீது கலர் பொடிகளைத் தூவ வேண்டாம்… அவ்வாறு தூவினால் பரிசுகள் வழங்கப்படாது என்றும் எச்சரித்தனர்.
700 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்கும் இந்த போட்டியின் முடிவில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த வீரருக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி 2 சுற்றுகள் முடிவடைந்து 3 ஆவது சுற்று தொடங்கியது. அப்போது வரை 224 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளனர். 5 காளைகளை அடக்கி கோபாலகிருஷ்ணன் என்பவர் முன்னிலையில் இருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
**-பிரியா**
�,