‘பாஸ்…. எப்போ தான் வலிமை அப்டேட் விடுவீங்க’ என இணையத்தில் அஜித் ரசிகர்கள் கதறும் சத்தம் தயாரிப்பாளர் போனிகபூர் காதில் விழுவதாக இல்லை. வலிமை படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இல்லாத நிலையில், படம்குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துவருகிறார். ரஜினியின் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.
கொரோனா தளர்வுக்குப் பிறகு, படப்பிடிப்புக்குச் செல்ல நடிகர்கள் தயக்கம் காட்டிய போதும், முதல் ஆளாக படப்பிடிப்புக்கு கிளம்பிய பெரிய நடிகர் அஜித் தான். முழுமையான வேகத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அதோடு, பூனே, டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் சண்டைக் காட்சிகள் நடைபெற்றன.
தற்பொழுது, ஒட்டுமொத்த வலிமை படக்குழுவும் சென்னை திரும்பியிருக்கிறதாம். அஜித் அல்லாத சின்ன சின்ன காட்சிகளை இங்கு எடுத்துமுடிக்க இருக்கிறார்கள். அதன்பிறகு வெளிநாட்டு ஷெட்யூலில் ஒரு பத்து நாட்கள் படப்பிடிப்பை முடித்தால், படம் முழுமையாக முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. படம் துவங்கிய முதல் நாளிலிருந்தே க்ளைமேக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட ஹெச்.வினோத், இப்போது வரை அதில் விடாப்புடியாக இருக்கிறாராம்.
அதோடு, ஹைதராபாத் ஷூட்டிங் முடித்துவிட்டு, சிக்கிம் பகுதிகளுக்கு பைக்கில் ஒரு ட்ரிப் அடித்தார் அஜித். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அஜித் புகைப்படம் வைரலாவது போல, தற்பொழுது அஜித்தின் மகன் ஆத்விக் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் குடும்ப திருமண விழா ஒன்றில் அஜித் மனைவி ஷாலினி, அவரின் தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர்ட் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அஜித் இல்லை. ஏனெனில், வலிமை ஷூட்டிங்கில் இருந்ததால் அஜித் கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. அஜித் மகனின் புகைப்படம் குட்டிதல எனும் ஹேஷ்டேக்கில் இணையத்தில் டிரெண்டானது கூடுதல் தகவல்.
அஜித் – ஷாலினி காதலானது சரண் இயக்கத்தில் வெளியான அமர்களம் படத்தின் போது உருவானது. இருவருக்கும் திருமணம் 2000ல் நடைபெற்றது. அதன்பிறகு, 2008ல் ஜனவரி 3ஆம் தேதி மூத்த மகள் அனோஷ்கா பிறந்தார். அதன்பிறகு, அஜித்தின் இளைய மகன் ஆத்விக் மார்ச் 2, 2015ல் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**�,”