ஏர்டெல், வோடஃபோன் சந்தாதாரர்கள் நெட்வொர்க் மாற வேண்டுமா?

Published On:

| By Balaji

ரூ.1.47 லட்சம் கோடி மதிப்புள்ள ஏஜிஆர் பாக்கிகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் மூடப்படும் என்கிற அளவுக்குச் செய்திகளைப் பரப்பி விட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் சந்தாதாரர்கள் விரைவில் தங்களது நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய இரண்டும் ஏஜிஆர் (Adjusted Gross Revenue) என்ற வகையில் பெருமளவு பணத்தை அரசுக்குச் செலுத்தியாக வேண்டும். ஆனால் இவ்விரு நிறுவனங்களும் இதை பெருமளவு பாக்கிவைத்துள்ளன. இவற்றை செலுத்தியே ஆக வேண்டும் என்ற கடந்த வார உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப்பின், ஏர்டெல் திங்களன்று ரூ.10,000 கோடி செலுத்தியது.

இதுபற்றி ஏர்டெல் நெட்வொர்க்கின் தரப்பில், “மீதமுள்ள தொகையை செலுத்த குறைந்தது ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை ஆகும். மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணையின் தேதிக்கு முன்னர் பணம் செலுத்தப்படும்” என்று கூறப்படுகிறது.

தொலைதொடர்புத் துறையால் மதிப்பிடப்பட்ட ஏர்டெல்லின் மொத்த ஏஜிஆர் தொகை, ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட தொகை ரூ.35,586 கோடியாக உள்ளது.

இதேபோல வோடஃபோன் நிறுவனத்துக்கான நிலுவைத் தொகை 53,000 கோடி ரூபாயாக உள்ளது.

வோடஃபோன் ஐடியாவின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, கடந்த டிசம்பரில், “நிறுவனத்துக்கு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனம் மோசமான நிலையை அடையும்” என்று கூறியிருந்தார். இருப்பினும், இப்போது வோடஃபோன் ஐடியா தனது தொகையையும் செலுத்துவதாகக் கூறியிருக்கிறது. தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) எந்தவொரு வலுக்கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் அதுமுறையிட்டுள்ளது. ஆனால், அதுபோன்ற எந்த வாய்ப்பையும் வழங்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share