அரசு – தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“ஒன்றிய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்திட திட்டமிட்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் எதையாவது தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதா? தனியார் வசம் ஒப்படைக்கும்போது பரந்து விரிந்துள்ள விமான நிலையங்களின் நிலம் உட்பட சொத்துகள் முழுவதும் தனியாருக்கு தரப்படுமா?” என்பது உட்பட பல்வேறு கேள்விகளை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் திமுக எம்.பி டி.ஆர்.பாலு எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய விமானத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் “2022ஆம் ஆண்டு தொடங்கி 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள் திறம்பட இயக்கிடவும் சிறப்பான மேலாண்மைக்காகவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அரசு – தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ‘விமான நிலையத்தை நிர்வகிக்கும் உரிமையைத் தனியாருக்கு வழங்கக் கூடாது’ என்று மத்திய மோடி அரசுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
விமான நிலையத்தைத் தனியாரிடம் குத்தகைக்குவிடும் முடிவைத் திரும்பப் பெறக் கோரி கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே, ‘விமான நிலையத்தைத் தனியாருக்கு குத்தகைக்கு விடக் கூடாது’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், விமான நிலையங்கள் தனியாரிடம் கொடுக்கப்படுவதை ஒரு சாரார் ஆதரிக்கிறார்கள். “அரசால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் வசதிகள் மிகவும் சுமாராகத்தான் இருக்கும். விமானப் போக்குவரத்தாக இருந்தாலும், ரயில் போக்குவரத்தாக இருந்தாலும் மக்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்துதர வேண்டும். அந்த வசதிகளை அரசு சரியாகச் செய்யாது. ஏனென்றால், அதன் நோக்கம் லாபம் கிடையாது. லாபத்தை நோக்கமாகக் கொண்டிருந்தால்தான் புதிய வசதிகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், அரசுக்கு லாப நோக்கம் கிடையாது என்பதால், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் பற்றி அரசு கவலைப்படுவதில்லை.
தனியாரிடம் கொடுத்தால்தான் இந்தப் பிரச்சினைகளெல்லாம் சரியாகும். டெண்டர், தணிக்கை, சிஏஜி போன்ற நடைமுறைகள் தனியாரிடம் இருக்காது. எனவே, ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென்று நினைத்தாலும், தனியாரால் உடனடியாகவும் சுதந்திரமாகவும் அதைச் செய்துவிட முடியும். தனியாரிடம் இருந்தால்தான் அனைத்துப் பணிகளும் விரைவாக நடைபெறும். வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். அரசிடம் அதை எதிர்பார்க்க முடியாது’’ என்கிறார்கள் பொருளாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள்.
விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை ஏஏஐ (Airports Authority of India) ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. ‘இவற்றை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பி, விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ‘ஏற்கெனவே டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டும், அதன் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மக்களுக்கோ, நாட்டுக்கோ பெரிதாக பலன் ஏதுமில்லை’ என்று கடிதத்தில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘தனியார்மய நடவடிக்கையால் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரித்து, ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு, பொதுமக்களுக்கு கூடுதல் சுமைதான் ஏற்படும்’ என்ற அச்சத்தையும் கவலையையும் ஏஏஐ ஊழியர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.
**-ராஜ்**
.�,”