இந்திய விமானப்படை தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் சாகசத்தில் ஈடுபட்டார்.
இந்தியாவின் 87 ஆவது விமானப்படை தினம் இன்று(அக்டோபர்-8) மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய விமானப்படையின் வலிமையைப் பறைசாற்றும் விதமாக போர் விமானங்களின் பிரம்மாண்டமான சாகச நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, போர் விமானங்களின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளை இந்திய விமானப்படைத் தளபதி பதாரியா, இராணுவத் தளபதி பிபின் ராவத், கடற்படை தலைமைத் தளபதி கரம்பீர் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கண்டுகளித்தனர். மேலும் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவாக தேசிய போர் நினைவுச்சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர். மேலும் விமானப்படையில் சாதனைகள் நிகழ்த்திய வீரர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் பாலகோட்டில் சர்ஜிகல் தாக்குதல் நடத்திய படைப்பிரிவுக்கு ‘யூனிட் சைட்டேசன்’ என்ற விருதை விமானப் படைத் தலைமை தளபதி பதாரியா வழங்கினார். மேலும் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை வீழ்த்தியதற்காக இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் இடம்பெற்ற படைப்பிரிவுக்கும் ‘யூனிட் சைட்டேசன்’ விருது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில் மிராஜ் 2000, சுகோய் 30 எம்.கே.ஐ. போன்ற போர் விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தியது, மிக் பைசன் போர் விமானங்களின் சாகசத்தை, விங் கமாண்டர் அபிநந்தன் முன்னின்று வழிநடத்தினார். அதில் மிக்-21 ரக விமானத்தை இயக்கி அபிநந்தன் சாசகம் செய்தார். இந்த சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டியது. சினூக் ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.�,