மருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்கள்: ஆய்வு செய்ய உத்தரவு!

Published On:

| By Balaji

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி மற்றும் தடயவியல் துறை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் மருத்துவ மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யாவின் தந்தை மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்ற மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் கைரேகையை ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தனர். மாணவர்களின் கைரேகைகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் கைரேகையை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தேசிய முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பில், மாணவர்களின் கைரேகை சிடியில் வழங்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்களிடம் அசல் கைரேகை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில், நடப்பு ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் 4250 மாணவர்களில் 54 மாணவர்களைத் தவிர அனைவரும் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன், தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா? இதனை யார் கண்காணிக்கிறார்கள்? இங்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோ மெட்ரிக் மூலம் பெறப்பட்டதா என்பது குறித்து தேசிய தேர்வு முகமை நாளை பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி போலீசார் மற்றும் தடயவியல் துறை நேரில் சென்று, கல்லூரி முதல்வர் முன்னிலையில் ஆய்வு நடத்த வேண்டும். இதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share