nமுக்கிய நகரங்களில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு!

Published On:

| By Balaji

குஜராத்தின் நான்கு முக்கிய நகரங்கள், மத்தியப்பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூரில் இன்று (மார்ச் 17) முதல் வருகிற 31ஆம் தேதி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.7 லட்சத்துக்கும் கூடுதலாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புகள் குஜராத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, இன்று (மார்ச் 17ஆம் தேதி) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஆமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நேற்றைய (மார்ச் 16) போட்டி உட்பட மூன்று போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மத்தியப்பிரதேச மாநில அரசு போபால் மற்றும் இந்தூரில் இன்று (மார்ச் 17) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஜபால்பூர், குவாலியர், உஜ்ஜைன், ரத்லாம், பர்ஹான்பூர், சிந்த்வாரா, பெடுல், கார்போன் ஆகிய நகரங்களில் எங்கெல்லாம் மார்க்கெட் உள்ளதோ அங்கெல்லாம் 10 மணிக்கு கடைகள் அடைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share