|மீண்டும் சென்னையில் கனமழை: வானிலை ஆய்வு மையம்!

Published On:

| By Balaji

நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த வாரத்தில் விடாது மழை பெய்தது. தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக குமரி மாவட்டத்தில் அதீத கனமழை பெய்ததால், மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளம்போல் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் இன்று(நவம்பர் 15) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,” வடக்கு அந்தமான்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக, வரும் நவம்பர் 18ஆம் தேதி, தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகப் பகுதிகளில் நிலவக்கூடும். மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடலுக்கும் தென்மேற்கு வங்க கடலுக்கும் இடையில் வட கேரளா, மற்றும் வட தமிழகம் வளிமண்டல பகுதியில் காற்று திசைமாறும் பகுதி நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளவனூர் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நவம்பர் 15, 16 தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் பொதுவாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 17, 18 ஆகிய தினங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 17 முதல் 19ஆம் தேதிவரை, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel