hகங்கனா: ‘அம்மா’வைத் தொடர்ந்து அயோத்தி!

Published On:

| By Balaji

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் நடித்து வரும் கங்கனா, அதனைத் தொடர்ந்து அயோத்தி வழக்கை மையப்படுத்திய படத்தை தயாரிக்கவுள்ளார்.

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் *தாம் தூம்* படத்திற்கு பின் நடித்து வரும் படம் ‘தலைவி’. ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வருகிறது இப்படம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியது.

அதனைத் தொடர்ந்து, கங்கனா ரணாவத்தின் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டு வெளியான மணிகர்னிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி என்ற வரலாற்றுப் படத்தில் நாயகியாகவும், இயக்குநராகவும் பணியாற்றிய கங்கனா, இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘மணிகர்னிகா பிலிம்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார். சமீபத்தில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி இத்தயாரிப்பு நிறுவனம் குறித்து கூறும் போது, ‘மக்கள் விவாதிக்க அஞ்சும் தலைப்புகளில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கங்கனா தயாரிப்பாளராக தனது முதல் படத்தை அறிவித்துள்ளார். *அபராஜிதா அயோத்தியா* என்று பெயரிடப்பட்ட இப்படம் ராம் மந்திர் பிரச்சினை மற்றும் அயோத்யாவின் நீதிமன்ற வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது.

இது குறித்து கங்கனா இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, “அயோத்தி குறித்து எத்தனையோ ஆவணப்படங்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ‘அபராஜிதா அயோத்தி’-யை வேறுபடுத்துவது என்னவென்றால், கடவுள் நம்பிக்கையற்ற முதன்மைக் கதாபாத்திரம் நம்பிக்கை கொண்டவனாக மாறும் பயணம் தான். ஒரு வகையில், இப்படம் எனது தனிப்பட்ட பயணத்தையும் பிரதிபலிக்கும். எனவே இது எனது முதல் படத்திற்கான(தயாரிப்பாளராக) பொருத்தமான கதைக்களம் என்று நினைக்கிறேன்.

பல வருடங்களாக அயோத்தி நமது தேசத்தின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அயோத்தி என்ற பெயரை எதிர்மறை ஒளியில் குறிப்பிடப்படுவதைக் கேட்டு நான் வளர்ந்திருக்கிறேன். தியாகங்களின் அடையாளமாக இருந்த நிலம் ஒரு சொத்து தகராறின் பொருளாக மாறியது. இந்த வழக்கு இந்திய அரசியலின் முகத்தை மாற்றியது மற்றும் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற உணர்வை பிரதிபலித்தது” எனக் கூறினார் கங்கனா.

இப்படத்திற்கு ராஜமெளலியின் தந்தையும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான கே.வி. விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுத ஒப்பந்தமாகியுள்ளார். தலைவி படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

மிக விரைவில் இப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகையர் பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளார் கங்கனா. ஜான்சி ராணி, ஜெயலலிதா பயோபிக்கை தொடர்ந்து, அயோத்தி வழக்கு என தொடர்ந்து உண்மைக் கதைகளை மையப்படுத்தும் சினிமாக்களில் கங்கனா கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share