சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான வெங்காயம், பூண்டின் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
பாமாயில் விலை கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.20 (35 சதவிகிதத்துக்கும் அதிகமாக) அதிகரித்துள்ளது. இது இதர சமையல் எண்ணெய்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கின்றன. மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து அதிக விலைக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதன் காரணமாக மேலும் விலை அதிகரிக்கலாம் என்று எண்ணெய் – விதை சந்தை நிபுணர் சலில் ஜெயின் ஐஏஎன்எஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. இறக்குமதி மூலம் அதன் சமையல் எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. கனமழையால் சோயாபீன் பயிர்கள் சேதமடைந்ததாலும், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட ரபி எண்ணெய் விதை, சாகுபடியை விடவும் குறைவாக இருப்பதாலும், வெளிநாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
அர்ஜென்டினாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சோயா எண்ணெய் மீதான வரி அதிகரிப்பு, இந்தியாவில் சோயா எண்ணெய் இறக்குமதியின் விலையை அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. அர்ஜென்டினா சோயா எண்ணெய் மீதான ஏற்றுமதி வரியை 25 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. மறுபுறம், அடுத்த ஆண்டு மலேசியாவில் பி-20 பயோ டீசல் திட்டமும், இந்தோனேசியாவில் பி-30 பயோ டீசல் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, இதன், பின்னர் இரு நாடுகளிலும் உள்நாட்டு பாமாயில் நுகர்வு அதிகரிக்கும்.
Solvent Extractors தரவுகள்படி, சமையல் எண்ணெய் (சமையல் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாத) இறக்குமதி, இந்த ஆண்டு நவம்பரில் 11,27,220 டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 11,33,893 டன்னாக இருந்தது.
கடந்த வாரம் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எண்ணெய் விதை பயிர்களின் பரப்பளவு இந்த ஆண்டு 68.24 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.47 லட்சம் ஹெக்டேர் குறைவு. கடந்த கரிஃப் பருவத்தில் முக்கிய எண்ணெய் விதை பயிரான சோயாபீனின் உற்பத்தி சுமார் 18 சதவீதம் குறைந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சோயாபீன் செயலிகள் சங்கம் (சோபா) மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு நாட்டில் சோயாபீன் உற்பத்தி 89.94 லட்சம் டன் மட்டுமே உள்ளது, முந்தைய ஆண்டில் 109.33 லட்சம் டன் உற்பத்தி இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. அதன்படி உற்பத்தி குறைவு, இறக்குமதி வரி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் எண்ணெய் விலை மேலும் உயரக் கூடும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.�,