முன்கூட்டியே தண்ணீர் திறப்பு: பருத்தி மகசூல் பாதிக்கும் அபாயம்!

public

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நெல் தவிர கரும்பு, வாழை, தென்னை, உளுந்து, வெற்றிலை, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பணப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
கோடைக்காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2020-21 ஆண்டு 5,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 2021-22இல் 7,500 ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக அளவு பருத்தி விளைவிக்கக்கூடிய மாநிலங்களான ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக பருவம் தவறி மழை பெய்ததால் பருத்தி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், பருத்தியின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் பருத்தி பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் ரூ.5, 850-க்கு கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு குவிண்டால் ரூ.10,000-க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரும்பு, நெல் சாகுபடிக்கு பதிலாக அதிக அளவிலான விவசாயிகள் கோடையில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் ஆன நிலையில் பருத்திச்செடிகள் பூ வைத்து காய் வைத்துள்ளது. இன்னமும் ஒரு மாத காலத்தில் பருத்தி பஞ்சு விளைச்சலுக்கு வரும்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்தத் தண்ணீர் கல்லணையை 16ஆம் தேதி வந்தடைந்து, அதன் பின்னர் பாசனத்தக்கு ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு 27ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விட்டது.
தற்போது முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் வயல்களில் தண்ணீர் வந்தால் பருத்தி உற்பத்தி என்பது வேர் அழுகல் நோய் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *