Bஅடுத்த சாட்டை: விமர்சனம்

public

கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பெரிய அளவிலான சாதிய பிரிவினை நிலவி வருகிறது. தலைமைப் பேராசிரியர் உட்பட பல பேராசிரியர்களும், மாணவர்களும், தங்கள் சாதியினர் தங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதத்தில் ஒரே நிறக் கயிறுகளைக் கைகளில் கட்டியுள்ளனர். கல்லூரியிலும் சாதியைக் காரணம் காட்டி மாணவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அதே கல்லூரியில் தமிழ் பேராசிரியராக வேலை செய்துவரும் தயாளன்( சமுத்திரகனி), இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறார். சாதி மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்தினரின் அலட்சியத்திற்கும், அவர்கள் செய்யும் அநீதிகளுக்கும் முடிவு காண முயற்சிக்கிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? அவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டதா? கல்லூரியில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்ததா? என்பதை விளக்குவதாக அடுத்த சாட்டை படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.

சாட்டைப் படத்தில் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அநீதிகள் பேசப்பட்டிருக்கும். அதில் முக்கிய கதாபாத்திரங்ளைக் கையாண்ட சமுத்திரகனி (தயாளன்), தம்பி ராமையா( சிங்கம் பெருமாள்), யுவன் (பழனி) போன்றவர்கள் அடுத்த சாட்டையில் அதே பெயர்களில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள். சமுத்திரகனி மற்றும் பிரபு திலக் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அன்பழகன் எழுதி இயக்கியுள்ளார். அதுல்யா ரவி, ராஜ்ஸ்ரீ பொன்னப்பா, ஸ்ரீராம் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கண்டு நொந்து போய், இதற்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்கியிருக்கும் சிலர் ஒரு மேடையும் மைக்கும் கிடைத்தால், தனது மனக்குமுறலை எல்லாம் கொட்டித் தீர்த்து விடுவார்கள். ஆனால் அது மற்றவர்களுக்கு சென்றடைந்ததா? அவர்கள் பேசியதன் நோக்கம் நிறைவேறியதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். அப்படியான மனக்குமுறலாக அடுத்த சாட்டை படம் அமைந்துள்ளது.

கல்லூரியில் நடக்கும் சாதிய வேறுபாடுகள், மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் அடக்குமுறை, கல்லூரி நிர்வாகத்தின் குறைபாட்டால் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், கலை-அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற பல வலிமையான, சமூகத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் படத்தில் பேசப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பக் காட்சிகளிலேயே அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுவதால் வெகு சீக்கிரத்திலேயே சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

சாட்டை, அப்பா என்று தொடர்ந்து ஒரே ஜானரிலான கதைகளில் சமுத்திரகனி நடித்துவருகிறார். அதே போன்ற அறிவுரை சொல்லும் பாத்திரமாகவே இருப்பதால், புதிதாக ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற ஆர்வம் சில காட்சிகளிலேயே மறைந்து விடுகிறது. தம்பி ராமையா ரைமிங்காகப் பேசும் சில காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அதுல்யா ரவி, தன்னால் ஏற்படும் பிரச்னையால் மனமுடைந்து கேள்வி கேட்கும் காட்சிகளில் பாராட்ட வைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘வேகாத வெயிலுல’ பாடல் நெஞ்சைத் தட்டி கண்களை ஈரமாக்குகிறது.

பிரதமரைக் கலாய்க்கும் வசனங்கள் மியூட் செய்யப்பட்டது கூடப் பரவாயில்லை. பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறும் காட்சியில் செக்ஸ் எஜுகேஷன் என்ற வார்த்தையின் ‘செக்ஸ்’ என்பது கூட மியூட் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நாடாளுமன்றம், கலை-அறிவியல் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டெர்வியூ என்று படத்தில் சொல்லப்பட்ட யோசனைகள் கல்லூரிகள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. ‘படித்த ஆசிரியர்கள் வேண்டாம், தினமும் படிக்கும் ஆசிரியர்கள் தான் வேண்டும்’ என்று படத்தில் இடம்பெறும் வசனம் அனைத்து ஆசிரியர்களுக்குமானது. இன்றுவரை சமூகத்தின் கொடிய நோயாக வளர்ந்து வரும் சாதிக் கொடுமையை இளைஞர்களுக்கான ஒரு படத்தில் பேச நினைத்தது பாராட்டத்தக்கது. ஆனால் அதை சரியான விதத்தில் கையாளாமல் விட்டது ஏமாற்றத்தைத் தருகிறது.

வலிமையான திரைப்படமாக மாற வேண்டிய அடுத்த சாட்டை, திரைக்கதையில் ஏற்பட்டுள்ள தொய்வினால் சரியான வேகத்தில் வீசியடிக்காமல் சென்றுவிட்டது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *