முரசொலி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கேட்கும் திமுக!

Published On:

| By Balaji

முரசொலி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கேட்டு திமுக சார்பில் சென்னை மாநகர ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட, அதற்கு பட்டாவுடன் ஸ்டாலின் பதிலளிக்க, இதை முன்வைத்து திமுக – பாமக இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முரசொலி நிலம் தொடர்பான உண்மை நிலை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழகத் தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி நிலம் தொடர்பான ஆதாரங்களை உரிய நேரத்தில் ஆணையத்திடம் ஒப்படைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘நாகர் சேனை – மறு உலகப் பேரரசு’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் இயங்கும் ஒரு கணக்கில் முரசொலி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக ஒரு செய்தி உலா வந்தது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 6) புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “கடந்த சில நாட்களாக திமுக அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ இதழ் அமைந்திருக்கும் இடமானது பஞ்சமி நிலம் என அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுகுறித்து, சட்டப்படியான நடவடிக்கைகளை திமுக எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அரசே பஞ்சமர் நிலத்தை பஞ்சமரிடம் மீட்டுக் கொடு. ஐந்து முறை ஆட்சி செய்து பஞ்சமர் நிலத்தை அபகரித்த திமுக முரசொலி அலுவலகம் நாகர் சேனை தலைமையில் முற்றுகைப் போர்’. 18.11.2019 திங்கள் காலை 10 மணிக்கு முரசொலி அலுவலகம் கோடம்பாக்கம்-சென்னை என்னும் அறிவிப்புடன் நாகர் சேனை – மறு உலகப் பேரரசு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருவதாகத் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி,

“இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தனியாருக்குச் சொந்தமான நிலங்களுக்கு எதிராக நடத்திட சட்டப்படியாக அனுமதி இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்திடாமல் தடுத்து, ‘முரசொலி’ அலுவலகத்துக்குக் காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share