hஅதிமுக நிர்வாகிகள் பணம் வாபஸ் பின்னணி!

Published On:

| By Balaji

மாநகராட்சி, நகராட்சித் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் என்ற அரசாணை நேற்று (நவம்பர் 20) வெளியிடப்பட்டதும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக நிர்வாகிகளோ வாயடைத்துப் போய்விட்டனர்.

காரணம் மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாய், நகராட்சித் தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாய், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் என்று ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்திருந்தனர். அரசாணை தகவலை அறிந்த அவர்களில் சிலர், ‘அப்படின்னா நாங்க கட்டின பணம் எல்லாம் அவ்ளதானா?’ என்று தலைமைக் கழக நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களையும் போன் போட்டுக் கேட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் நேற்று இரவே ஓ.பன்னீரிடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் தெரியப்படுத்தப்பட்டது.

பல நிர்வாகிகள் தங்கள் மனைவி, உறவினர்கள் பெயர்களில் பல விருப்ப மனுக்கள் கட்டியிருக்கிறார்கள். எனவே பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம் என்றும் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட… எக்காரணம் கொண்டும் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படக் கூடாது என்று சொல்லிவிட்டார் எடப்பாடி.

அதையடுத்துதான் இன்று (நவம்பர் 21) காலை, உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் அதிமுக பெற்றுவந்தது. தற்போது மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் விருப்ப மனு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், கழகப் பொதுக்குழு முடிந்தவுடன், தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் 25.11.2019 முதல் 29.11.2019 வரை தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து, அத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளது.

மேலும் தலைவர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் இப்போது தாங்கள் சார்ந்த வார்டுகளில் போட்டியிட விரும்பினால் 22 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தங்களது மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனு வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இவ்வாறு பணத்தைத் திருப்பித் தரும் நிலையில் திமுக நிர்வாகிகளும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share