மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.
“விக்கிரவாண்டி. நாங்குநேரி இடைத் தேர்தலில் திமுகவின் விக்கிரவாண்டி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எப்போதும் தேர்தல் பணிகளில் முந்திக்கொள்ளும் அதிமுக, வேட்பாளர்கள் யார் என்பதை நேற்றுவரை அறிவிக்கவில்லை. இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவிப்பதற்காக நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று காலை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் நடந்த அதிமுக நேர்காணலுக்கு மிகவும் குறைவான நபர்களே வந்திருந்தார்கள் என்று ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியாகியிருந்தது. 90 பேரே ஆளுங்கட்சி சார்பில் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அவர்களில் வெறும் 12 பேரை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேர்காணல் செய்தார்கள். மீதம் உள்ள 78 பேரையும் தலைமைக் கழகத்தின் கூட்டம் நடக்கும் ஹாலில் வரிசையாக அமரவைத்து விட்டு இன்னோர் அறையில் நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணல் முடித்த நிலையில் அந்த 78 பேரிடமும் தேடிவந்த பழனிசாமியும் பன்னீர் செல்வமும், ‘வாய்ப்பு கிடைக்காதவங்க சோர்ந்து போயிடக் கூடாது. டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுல உங்க எல்லாருக்கும் பதவி உண்டு. இதை மனசில வெச்சிக்கிட்டு எந்த தொய்வும் இல்லாமல் தேர்தல் வேலை பார்க்கணும். இடைத் தேர்தல்ல ஜெயிச்சா தான் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தலை காட்ட முடியும் என்பதை நம் மனத்தில் வைத்து தேர்தல்ல தீவிரமாகச் செயல்படணும்’ என்று தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் வேட்பாளர் நேர்காணலுக்கு மொத்தம் 12 பேர்களே அழைக்கப்பட்டாலும் போட்டி கடுமையாக இருந்திருக்கிறது. அதுவும் நாங்குநேரியை விட விக்கிரவாண்டியில்தான் அதிக போட்டி.
நேற்றைய கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த 2018 டிசம்பர் மாதத்திலேயே விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்த ராஜ்ய சபா எம்.பி. லட்சுமணன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அந்த இடத்துக்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமித்தார்கள். தர்மயுத்தம் நடத்தியபோது பன்னீரின் தீவிர ஆதரவாளராக இருந்த லட்சுமணனின் பதவிப் பறிப்பில் பன்னீரே கையெழுத்து போட்டதுதான் அப்போதைய விழுப்புர அதிமுகவில் விவாதமானது. அப்போதே பலத்த நெருக்கடிக்கு இடையில்தான் அதைச் செய்தார் ஓ.பன்னீர். அப்போது புதிதாக மாசெ ஆக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் பன்னீரைச் சந்தித்து வாழ்த்து பெறவில்லை. தனக்காக தர்மயுத்தம் நடத்திய லட்சுமணனின் பதவியைப் பறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுக்க வைக்கப்பட்டார் ஓ.பன்னீர். ஆனால், பதவி பெற்றவர்களில் சி.வி.சண்முகம் மட்டும் ஏன் ஓ.பன்னீரைச் சந்திக்கவில்லை என அப்போதே அதிமுகவில் குரல்கள் எழுந்தன
இப்போதைய சூழலில் எம்.பி பதவியும் முடிந்துவிட்ட நிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் தான் நிற்க பன்னீரிடம் விருப்பம் தெரிவித்தார் லட்சுமணன். ஆனால், சி.வி.சண்முகமோ தனது ஆள்தான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ‘நான் சொல்றவங்களை நிறுத்தினாதான் வெற்றிபெற வாய்ப்பிருக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். ஒருகட்டத்தில் ஓபிஎஸ்ஸா, சிவிஎஸ்ஸா என்கிற இக்கட்டான நிலை இபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுவிட்டது.
திமுக வேட்பாளராக விக்கிரவாண்டியில் புகழேந்தி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக எதிர்பார்த்த அளவுக்கு அவர் வலிமையான வேட்பாளர் இல்லை என்று நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டது. எனவே அரசு எந்திர பலத்தோடு விக்கிரவாண்டியில் திமுகவை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிமுகவில் இருப்பதால் நாங்குநேரியைவிட விக்கிரவாண்டிக்கு அதிக போட்டி நிலவுகிறது. சி.வி.சண்முகம் நிறுத்தும் நபரை வேட்பாளர் ஆக்குவதா, ஓபிஎஸ் சிபாரிசு செய்யும் லட்சுமணனை வேட்பாளராக ஆக்குவதா என்ற குழப்பத்தில் நேற்றைய கூட்டம் முடிக்கப்பட்டது.
பேசாமல் 2016 தேர்தலில் இந்தத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தினால் என்ன என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமிக்கு, கூட்ட முடிவில் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இன்று காலை அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடக்கூடும். அதில் சி.வி.சண்முகமே வெல்லக் கூடும் என்பதுதான் அதிமுக வட்டாரம் கூறும் தகவல். எது எப்படியோ… ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சி.வி.சண்முகத்துக்குமான மோதலை நேற்றைய கூட்டம் மீண்டும் புதுப்பித்துவிட்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
�,