uஅமமுகவைப் பதிவு செய்ய அதிமுக எதிர்ப்பு ஏன்?

Published On:

| By Balaji

அமமுக விரைவில் கட்சியாகப் பதிவு செய்யப்படும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமமுக கட்சியை ஆரம்பித்த தினகரன், அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாமல் இருந்துவந்தார். மக்களவைத் தேர்தலில் சின்னம் கேட்டு தினகரன் தொடர்ந்த வழக்கில், சின்னம் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்கிறோம் என்று தினகரன் தரப்பு உறுதியளித்தது. அதன்படி, அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்யும் பணிகள் வேகமெடுத்தன. இதுதொடர்பான விளம்பரமும் நாளேடுகளில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்றது. அதில், அமமுக துணைத் தலைவர் அன்பழகன், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி அமமுகவைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். ஆட்சேபத்துக்கும் உரிய விளக்கம் அளித்தனர்.

**அமமுகவைப் பதிவு செய்வதில் சிக்கல் இல்லை**

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர்பாண்டியன், “அமமுகவைப் பதிவு செய்வதற்கு ஆட்சேபம் தெரிவித்தவர்களின் மனுக்களின் நகல் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதிமுக தரப்பிலிருந்தும், இன்னும் மூன்று பேரும் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்திருந்தனர். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம். கட்சியைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் ஏற்படாது. இதுதொடர்பான விவகாரம் உரிய நடைமுறைப்படி தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளதால், எங்களுக்குக் கட்சிப் பதிவு என்பது அவசியமானது என விளக்கமாகக் கூறியுள்ளோம். விரைவில் அமமுக பதிவு செய்யப்படும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “ஜெயலலிதா புகைப்படம், கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. அம்மா என்னும் பெயர் ஜெயலலிதாவைத்தான் குறிக்கிறது. எனவே அதைப் பயன்படுத்தக் கூடாது என எழுத்துபூர்வ வாதத்தை அதிமுக தாக்கல் செய்தது” என்று சுட்டிக்காட்டிய ராஜா செந்தூர்பாண்டியன்,

“அதற்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளோம். அரசியலுக்கு வந்தவுடன் தலைவர்கள் பொதுவான நபர்கள் ஆகிவிடுவதால், அவர்களது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. தமிழகத்திலும் சரி, இந்திய அளவிலும் சரி… கட்சித் தலைவர்களின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்திதான் கட்சி நடத்துகிறார்கள்” என்று விளக்கினார்.

மேலும், “அதிமுக கட்சியில் ஜெயலலிதாவின் பெயர் கிடையாது. அதிமுகவின் கொடியிலும் அண்ணாவின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது, ஜெயலலிதாவின் உருவப்படம் கிடையாது. ஆகவே, அதிமுக கொடிக்கும் எங்களுடைய கொடிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் காண்பித்துள்ளோம். கட்சிப் பதிவுக்குக் கொடி அவசியமில்லை எனத் தேர்தல் ஆணையம் அழுத்தமாகத் தெரிவித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share