oஅதிசயம் நடக்காது: ரஜினிக்கு அதிமுக பதில்!

Published On:

| By Balaji

முதல்வர் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு அதிமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார். முதலமைச்சர் ஆன பிறகு அவரது ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று தமிழகத்தில் சொல்லாதவர்களே கிடையாது. அதிசயமும், அற்புதமும் நிகழ்ந்தது. ஆட்சி கலையவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும் என்றும் பேசியிருந்தார். அதாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டும் விதமாகவே அவரை விமர்சித்துப் பேசியிருந்தார் ரஜினிகாந்த். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து பலரும் பதில் சொல்லி வருகின்றனர்.

சென்னையில் இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்தபோது, இதற்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் ஆட்சி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. எனவே, எந்த அதிசயமும் நடக்காது. எவ்வித அதிருஷ்டமும் யாருக்கும் கிடைக்காது. அதிசயமும், அதிருஷ்டமும் அதிமுகதான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதுதான் ரஜினி சொன்ன அதிசயம்” என்று தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “எங்களைப் பொறுத்தவரை கனவு என்பது அல்ல, நனவாக மாறியிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பல முறை இந்த ஆட்சி விரைவில் போய்விடும் என கூறினார். ஆனால் சட்டமன்றத்தில் 122 பேர் இருந்த நாங்கள் தற்போது 124 பேராக இருக்கிறோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.மக்கள் உள்ளங்களில் முதலமைச்சர் நிறைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்தார்.

கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், “சினிமாவில் சிகரெட் தூக்கி போட்டு பிடித்தவர்களையெல்லாம் மக்கள் கணக்கில் கூட வைத்துக் கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாருமே நெருங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் தவறில்லை. ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தின்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செம்மலை, “ரஜினி நினைக்கும் அதிசயம் நிச்சயம் நடக்காது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானார் என்றால் அதிமுக என்ற அடித்தளம் அவருக்கு இருந்தது. ஆசைப்படுபவர்கள் எல்லாம் ஆசைப்படும் எல்லாவற்றையும் அடைய முடியாது. சினிமாவில் வேண்டுமானால் ‘டூப்’ போடலாம். அரசியலில் நிச்சயமாக டூப் போட முடியாது” என்று கூறினார்.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியல், ஆளுமை, தலைமைப்பண்பு ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட செம்மலை, “சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு அடித்தளம் ஆகிவிடாது. ரஜினியின் பாப்புலாரிட்டி அரசியலில் நிச்சயம் எடுபடாது” என்று விமர்சித்தார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், “எடப்பாடி பழனிசாமி அதிசயம் நடந்து முதல்வரானதை போல தானும் முதல்வர் ஆவேன் என்ற ரஜினியின் கருத்து அறியாமையின் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு நடக்குமென்று நினைப்பது அதிசயம் ஆகாது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல. அதிமுகவில் அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரோடு ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது” என்று கூறினார்.

மேலும், “சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆரோடு ரஜினியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த கட்சியின் பொருளாளராக இருந்தவர். நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதலமைச்சரானவர் அல்ல. இப்படி எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்’ என்றும் விமர்சித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share