dவிஜயகாந்தைச் சந்தித்து அதிமுக நன்றி!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தொகுதி வெற்றியையடுத்து விஜயகாந்தை நேரில் சந்தித்து அதிமுகவினர் நன்றி தெரிவித்தனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றிபெற்றது. இதனையடுத்து, தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பிற்பகல் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டியில் வெற்றிபெற்ற முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தது. கடைசி நாள் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதனால் ராமதாஸை சந்தித்த அதிமுகவினர், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தைச் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர், சாலிகிராமத்திலுள்ள இல்லத்தில் விஜயகாந்தை நேற்று (அக்டோபர் 26) மாலை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விஜயகாந்திடம் முத்தமிழ்ச்செல்வன் வாழ்த்து பெற்றார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சட்டத்துறை அமைச்சர் திரு சி. வி. சண்முகம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரு.MR முத்தமிழ்ச் செல்வன், இன்று மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.விழுப்புரம் தேமுதிக மாவட்ட செயலாளர் திரு L. வெங்கடேசன் மற்றும் துணை செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி உடனிருந்தனர்” என்று தெரிவித்தார்.

விஜயகாந்தைத்தான் முதலில் சந்தித்து நன்றி தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தைலாபுரம் அருகிலிருப்பதால் முதலில் ராமதாஸை சந்தித்துவிட்டு பின்னர் சென்னை சென்று விஜயகாந்தை சந்திக்கலாம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி, ராமதாஸை சந்தித்தவுடன் சென்னை கிளம்பிவந்து விஜயகாந்தையும் சந்தித்திருக்கிறார்கள்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share