திமுக அலுவலகங்களின் நில ஆவணங்கள்: விசாரணை கோரும் பாமக

Published On:

| By Balaji

அசுரன் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு கருத்தைத் தொடர்ந்து, பாமகவுக்கும் திமுகவுக்கும் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நில ஆவணம் பற்றி வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.

ஸ்டாலின் -ராமதாஸ் இடையே நீடிக்கும் இந்த போரின் தொடர்ச்சியாக பாமக தலைவர் ஜி.கே.மணி புதிய கோரிக்கை ஒன்றை எழுப்பியுள்ளார்.

இன்று (அக்டோபர் 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985 ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960 களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால் அதற்கான மூலப் பத்திரத்தையும், பதிவு ஆவணங்களையும் தானே வெளியிட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் எதிர்வினா எழுப்பியிருந்தார். அதற்குப் பிறகும் மூல ஆவணங்களை வெளியிடவில்லை. மாறாக, அரசியலில் இருந்து மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். மருத்துவர் ராமதாஸின் வினாக்களுக்கு விடையளிக்க அஞ்சி ஓடுவதிலிருந்தே அவரது நேர்மை வெளிப்படுகிறது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அந்த நாளுக்கு ஏற்ற வகையில் சில குற்றச்சாட்டுகளை மருத்துவர் மீது முன்வைத்தார். வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை மருத்துவர் அபகரிக்கப் பார்ப்பதாக அபாண்டமான புளுகியிருந்தார். அதற்கு பதிலளித்த மருத்துவர், அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இல்லாவிட்டால் ஸ்டாலின் விலகத் தயாரா? என்றும் வினவியிருந்தார். இன்று வரை அந்தக் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபிக்கவும் இல்லை; அரசியலில் இருந்து விலகவும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கும் ஜி.கே.மணி தொடர்ந்து,

“முரசொலி நிலம் தொடர்பான 1924 ஆம் ஆண்டின் மூல ஆவணம் முதல் 1960களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி அமைந்திருந்த நிலம் எப்படி, எவ்வளவு தொகைக்கு முரசொலிக்கு மாறியது என்பதை அவர் விளக்க வேண்டும். இவற்றைக் கடந்து அரசியலில் நேர்மை என்பது சிறிதளவாவது இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி மாவட்டத் தலைநகரங்களில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகங்கள் வரை ஒவ்வொன்றும் யார் யாருக்கு சொந்தமான, எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்து வெளிப்படையான விசாரணையை அரசு நடத்த ஆணையிடக் கோரி எதிர்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share