எடப்பாடி- பழனியப்பன்: யாருக்கு யார் தூது விட்டது?

Published On:

| By Balaji

சேலம் ஓமலூரில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சக அரசியல் பிரமுகர்களை சகட்டு மேனிக்கு விளாசினார்.

“ அமமுகவில் இருந்து நிறைய பேர் அதிமுகவுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். இன்று கூட எடப்பாடியில் இருந்து சேலத்தில் இருந்து அமமுகவினர் பலர் வந்து அதிமுகவில் சேர்கிறார்கள். மாநிலம் முழுதும் இப்படி நிறைய பேர் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்ற எடப்பாடி பழனிசாமியிடம்,

“முன்னாள் அமைச்சர் பழனியப்பனை அதிமுகவின் ஸ்லீப்பர் செல் என்கிறார்களே?” என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். நவம்பர் 10 ஆம் தேதி சேலத்தில் கூட்டம் போட்ட அமமுக பிரமுகர் புகழேந்தி அமமுகவில் இருக்கும் அதிமுகவுக்கான ஸ்லீப்பர் செல் பழனியப்பன் தான் என்று கூறினார். அதன் அடிப்படையிலேயே முதல்வரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ அமமுகவை நீங்கள் கட்சி என்று கருதி கேட்பதால்தான் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை. அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்களா? அவர் ஒரு அமமுகவில் சாதாரணமானவராக நினைக்கிறேன். அமமுகவை நான் கட்சியாகவே பார்க்கவில்லை. அவர் பல்வேறு கட்சிகளுக்கும் போவதற்கு தூது விட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். இங்கே வருவதற்கும் (அதிமுக) தூது விட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட ஆளுக்கெல்லாம் இங்கே இடமில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தினகரன் தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று சொல்லிவந்த அதிமுக தலைவர்கள், பழனியப்பன் போன்றவர்களுக்கு இங்கே இடமில்லை என்று சொல்வது பற்றி பழனியப்பன் தரப்பிடமே விளக்கம் கேட்டோம்.

அவர்கள் நம்மிடம், “பழனியப்பனிடம் சமரசம் பேசுவதற்கு எந்தெந்த அமைச்சர்கள் தூது அனுப்பப்பட்டார்கள் என்பது எடப்பாடிக்கு நன்கு தெரியும். ஆனால் பழனியப்பன் அவருக்கு தூதுவிட்டதாக சொல்கிறார். நாங்கள் அதிமுகவுக்கு தூதுவிட வேண்டிய அவசியம் இல்லை.

பழனியப்பனும் டிடிவி தினகரனும் நல்ல தொடர்பில் நல்ல புரிந்துணர்வில் இருக்கிறார்கள். அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார் பழனியப்பன். வரும் 15 ஆம் தேதி தர்மபுரியில் அமமுக நடத்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை அழைத்து ஆலோசனைகள் வழங்க பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார் பழனியப்பன். இது அதிமுகவுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடப்பாடிக்கு நன்கு தெரியும். பல முறை அழைத்தும் பழனியப்பன் வரவில்லை என்ற கோபத்தில்தான் எடப்பாடி மாற்றிச் சொல்லியிருக்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக எப்படித் தோற்றதோ அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்கும். அதற்கு அமமுகவின் வாக்குகள் காரணமாக இருக்கும். இந்த பயத்தில்தான் எடப்பாடி, அதிமுகவுக்கு நாங்கள் தூது விட்டதாகச் சொல்லியிருக்கிறார். யார் யாருக்கு தூது விட்டார்கள் என்பது விரைவில் தெரியும்” என்கிறார்கள் பழனியப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share