தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் மும்பையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
படப்பிடிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகள் முடிந்ததும் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். தர்பார் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், இன்று (செப்டம்பர் 13) காலை 6.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து கார் மூலம் இமயமலை பகுதிகளுக்கு செல்கிறார். 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் கேதர்நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு ரஜினிகாந்த் செல்லவுள்ளார். இமயமலை பயணம் முடிந்த பிறகு தர்பார் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இப்பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
�,