சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்துக்கு பெயர் பெற்றவர் மன்சூர் அலிகான். நடிப்புக்கு அடுத்தப்படியாக அரசியல் களத்தில் குதித்த இவர், நாம் தமிழர் கட்சியில் இணைந்து, அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்பு, அக்கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், தோல்வி அடைந்தார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்தான் மன்சூர் அலிகான். நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசிதான் காரணம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்காக 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாகக் கூறி, மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
18 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோர், 2400 சதுர அடி நிலத்தை மன்சூர் அலிகானிடம் விற்றதாகவும், பின்புதான் அது அரசு புறம்போக்கு நிலம் என தெரியவந்ததும், 2019 ஆம் ஆண்டு நிலத்தை தன்னிடம் விற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் அப்போதே தள்ளுபடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2500 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறி மண்டலம் 8, கோட்டம் 105 மாநகராட்சி அதிகாரிகளால் நடிகர் மன்சூர் அலிகான் வீடு பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,