vகமல்ஹாசன் காலில் கம்பி: நாளை அறுவை சிகிச்சை!

Published On:

| By Balaji

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடியிலிருந்து படியில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சில வார ஓய்வுக்குப் பிறகு அன்றாட பணிகளுக்குத் திரும்பினார்.

அதன்பிறகு தொடர்ச்சியாக பணிகள் இருந்ததாலும், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதாலும் காலில் பொருத்தப்பட்ட கம்பியை அகற்றுவது தாமதமாகிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் இன்று (நவம்பர் 21) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது” என்று தெரிவித்தார்.

மேலும், “மருத்துவர்களின் ஆலோசனைப்படி வரும் 22 ஆம் தேதி (நாளை) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல்ஹாசன் நம்மை சந்திப்பார்” என்றும் தெரிவித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share