கல்கி பகவான் குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு!

Published On:

| By Balaji

கல்கி பகவான் ஆசிரமத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு கரன்சி மற்றும் வெளிநாட்டில் முதலீடு செய்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கல்கி பகவான் குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை நேரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆந்திராவில் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் உட்பட பல இடங்களில் செயல்பட்டுவரும் கல்கி ஆசிரமத்தின் கிளைகளில் கடந்த வாரம் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையில், 800 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, 90 கிலோ தங்கம், கணக்கில் காட்டப்படாத 4,000 ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஹவாலா மூலம் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாட்டு கரன்சி மற்றும் ஹவாலா மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவை மத்திய அமலாக்கத் துறையின்கீழ் வருவதால் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம், 1999இன் (ஃபெமா) கீழ் கல்கி குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்கி ஆசிரமத்தின் கணக்காளர் உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share