முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. இட ஒதுக்கீடு தரும் விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும் மாநிலங்களே சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இட ஒதுக்கீட்டைப் பெற குறிப்பிட்ட மருத்துவர்கள் 5 ஆண்டுகள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் கட்டாயமாகப் பணி செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.
**முதல்வர் எடப்பாடி பழனிசாமி**
கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்.
*திமுக தலைவர் ஸ்டாலின்**
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவுக்கு மிகச் சிறந்த பாடம். ஏழை – எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கவும் கொண்டு வந்த சலுகையிலும் இந்திய மருத்துவக் கவுன்சில் அநியாயமாகக் குறுக்கிட்டு – அந்தச் சலுகைகளை ரத்து செய்து – அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற சுகாதாரத்திற்கும் பேரிடரை ஏற்படுத்தியது.
மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மற்றோர் அங்கமாகவே முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளைப் பறித்து – கடந்த இரு ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களையும் – சட்டப் போராட்டத்தையும் நடத்திட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு உயிர்காக்கும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி – நோய் நொடியின்றி கிராமப்புற மக்களைப் பாதுகாத்திட வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.
மாநில உரிமைகளில் கண்மூடித்தனமாகக் குறுக்கிடக் கூடாது என்று இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலையில் உச்சநீதிமன்றம் வைத்துள்ள குட்டு – கூட்டாட்சித் தத்துவத்தையும் – மாநில உரிமைகளையும் மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு நினைவுபடுத்தும் மிகச்சிறந்த பாடம் என்றே நான் கருதுகிறேன்.
**பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி**
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 1758 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களும், 8 பிரிவுகளில் 42 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1800 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழகம் 2000 ம் ஆவது ஆண்டின் மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி இந்த ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவின் விதிகள் செல்லும் என்றும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மருத்துவர்கள் சங்கம் செய்த மேல்முறையீட்டில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் எந்த ஒரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு மட்டும் தான் உண்டு என்றும், அதை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுவுக்கு கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதன் மூலம் கல்வி, சமூகநீதி சார்ந்த விஷயங்களில் மாநில அரசுகளின் உரிமை உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் மலைப்பகுதி அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டும் தான் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்பதால் மருத்துவர்கள் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் சேருவார்கள். அதுமட்டுமின்றி, 50% ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று விதி இருப்பதால் அரசு மருத்துவமனைகளுக்குத் தாராளமாக மருத்துவர்கள் கிடைப்பர். அதனால் கிராமப்புற மருத்துவமனைகளில் அதிக அளவில் பட்ட மேற்படிப்பு முடித்த சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பதால், ஊரக மக்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைக்கும். தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவமும், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியும் கிடைப்பதற்கு இந்திய மருத்துவக் குழுவின் நடைமுறைக்கு ஒத்துவராத விதிகள் தடையாக உள்ளன. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அத்தடைகளைத் தகர்க்க பாமக பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,”