aமீண்டும் எல்லையில் அத்துமீறிய சீனா!

Published On:

| By Balaji

லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்தது. பதிலடியாக இந்தியாவும் தனது படைகளைக் குவித்தது. ஜூன் 15ஆம் தேதி இரவு இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பாகச் சீன அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அதோடு, சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக மேஜர் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் கள்வான் பகுதியில் நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீனாவால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பரஸ்பர அடிப்படையில் இரு நாட்டுப் படைகளும் ஜூலை முதல் வாரத்தில் திரும்பப் பெறப்பட்டன.

இந்த நிலையில் சீனா மீண்டும் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் இன்று (ஆகஸ்ட் 31) தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டது. இது இந்திய மற்றும் சீன ராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை மீறும் வகையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாங்கோங் த்சோ ஏரியின் வடக்கு கரையோரத்தில் நடந்த சீன ராணுவத்தின் இந்த முயற்சியை இந்தியப்படையினர் முறியடித்ததாகவும், சீன ராணுவம் தன்னிச்சையாக, அங்கிருக்கும் சூழலை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அதை தடுப்பதற்கு தங்களது நிலையை வலிமைப்படுத்திக் கொண்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட உறுதி கொண்டுள்ள அதே வேளையில் தங்களது பிராந்தியத்தைக் காக்கவும் உறுதி ஏற்று இருப்பதாகவும் கூறியுள்ளது.

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பிரிகேட் கமாண்டர் மட்டத்திலான கொடி சந்திப்பு சுஷூல் பகுதியில் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share