சேலம்: அரசு-தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து!

Published On:

| By Balaji

சேலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக் கொண்டு கோர விபத்து நடந்துள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (அக்டோபர் 22) காலை 8 மணியளவில் ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி sss என்ற தனியார் பேருந்து அதிவேகமாகச் சென்றுள்ளது. வாழப்பாடிக்குச் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, வைகை மேல் நிலைப் பள்ளிக்கு அருகே அந்த தனியார் பேருந்து இணைப்பு சாலையில் இருந்து சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்குத் திரும்பியுள்ளது.

நெடுஞ்சாலையில் அரசு பேருந்து வருவதை அறியாமல் தனியார் பேருந்து ஓட்டுநர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் சென்னையிலிருந்து வந்த அரசு விரைவு பேருந்து மோதியதில். தனியார் பேருந்து பின் பக்கம் பெரிதும் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் தனியார் பேருந்தில் பின் பக்க இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வாழப்பாடி போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆத்தூர் முதல் சேலம் வரை இணைப்பு சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாகத் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் செல்வதுதான். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வரும் மாணவ மாணவிகள் சாலையை கடக்கும் போது மிகுந்த அச்சத்துடனே கடப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஆத்தூர் சேலம் இடையே தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. ஆத்தூரிலிருந்து பேருந்துகள் கிளம்பும் போதே இருக்கைகள் முழுவதும் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதனால் ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் வரை பேருந்துகள் இடை நிறுத்தப்படுவதில்லை. வாழப்பாடியில் மட்டுமே நிறுத்தப்பட்டு செல்கின்றன. ஒரு சில பேருந்துகள் வாழப்பாடி பகுதிக்குள் செல்லாமல், நெடுஞ்சாலையிலேயே சென்றுவிடுகின்றன. இதனால் குறைந்த நேரத்தில் சேலத்துக்குச் சென்றுவிடுவதால் இளைஞர்கள் தனியார் பேருந்துகளிலேயே செல்ல விரும்புகின்றனர். பயணிகளை ஏற்றிக் கொண்டு இடை நிறுத்தாமல் செல்வது ஒரு பக்கம் என்றாலும், பேருந்துகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதாவது, சேலம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் 1.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு பர்மிட் வழங்கப்படுகிறது. இதனாலே பேருந்துகள் அதிவேகமாகச் செல்கின்றன.

இதிலும் இன்று விபத்துக்குள்ளான sss போன்ற சில தனியார் பேருந்துகளுக்கு 1.10 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே விபத்துகள் ஏற்படாமல் இருக்க இணைப்பு சாலை பகுதிகளில் தனியார் பேருந்துகள் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share