சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில், ராஜீவ் என்பவருக்கு ஸ்ரீகிருஷ்ணசாமி என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டுவருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஃபேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இன்று(ஏப்ரல் 5) காலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்வதற்காக ஆலையின் கதவை திறந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாரனேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆலையின் போர்மேன் முத்துராஜ் மற்றும் மேலாளர் கோமதிராஜ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகாசியில் அண்மையில் ஒருமாதத்தில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நேரத்தில், இந்த சம்பவம் நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
**வினிதா**
�,