நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பு: கலாமுக்கு பிரதமர் புகழாரம்!

Published On:

| By Balaji

இந்தியா மட்டுமின்றி பல நாட்டு மக்களின் இதயங்களை வென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்.

தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம்.  இதனால் அவரது பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி,  உலக மாணவர்கள் தினமாக 2010 ஆம் ஆண்டு ஐநா சபை அறிவித்தது.

கடந்த 2005ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி அப்துல் கலாம் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டார். எனவே அவரது வருகையை என்றும் நினைவுகூரும் வகையில், மே 26ஆம் தேதி சுவிட்சர்லாந்து அரசு, அறிவியல் தினமாக அங்கீகரித்துக் கொண்டாடி வருகிறது.

1931ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பிறந்த இவர், 1998ல் நடந்த பொக்ரான் அணு ஆயுத பரிசோதனையில் முக்கிய பங்காற்றினார். இந்த அணு ஆயுத சோதனைக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியா தனிப்பெரும் அணு ஆயுத சக்தியாக உருப்பெற்றது.

இவ்வாறு ஏவுகணை நாயகன் என்று அறியப்பட்ட அவர் மக்களின் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, மாணவர்களின் ரோல்மாடல் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தார். பத்மபூஷன்,  பத்மவிபூஷன்,  பாரத ரத்னா எனப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான கலாம், 2015ஆம் ஆண்டு ஜூலை 27, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அருமை மாணவர்களே” என்ற இறுதி சொற்களுடன் அவரது உயிர் பிரிந்தது.

இந்நிலையில் இன்று அவரது 89ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவுகளைப் பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் குடியரசுத் தலைவராகவும் தலைசிறந்த விஞ்ஞானியாகவும் விளங்கிய டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் வளர்ச்சிக்கு என்றும் அழியாத பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  “புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் கலாம்  . அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில்,  “என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல் குடிமகனான அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று, கலாமின் கனவான, வல்லரசு இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம் என்று பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #apjabdulkalam என்ற ஹேஷ்டேக்  ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

**-பிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share