nஉடல் உறுப்பு தானத்துக்கு ஆதார் கட்டாயம்!

Published On:

| By Balaji

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பில் சிறந்து விளங்குவதுபோன்று, உடல் உறுப்பு தானத்திலும் இந்தியாவில் முதன்மையாக உள்ளது. 2008ஆம் ஆண்டுதான், தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பெற்றது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கும், பெறுவதற்கும் வசதியாகவும் தமிழ்நாடு அரசு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுதிட்டத்தை உருவாக்கியது. பின்னர், அது, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்றுசிகிச்சை ஆணையம் எனமாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 2016 ஆண்டில் மூளைசாவு அடைந்த 185 பேர், 2017ஆண்டில் 160 பேர், 2018ஆண்டில் 140 பேர், 2019ஆண்டில் 127 பேர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. தொடர்ந்து ஆறுமுறை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்படும் விருதை தமிழ்நாடு பெற்று வருகிறது..

இந்நிலையில் உடல் உறுப்பு தானம் வழங்குவதற்கும், பெறுவதற்கும் புதிய கட்டுப்பாட்டு ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட செய்தியில், உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

பொதுமக்களுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share