சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலங்களை கையகப்படுத்த பிறப்பித்த அறிவிப்பாணையின் தாக்கம் குறித்து விளக்கமளிக்க நேற்று(டிச-4) மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை – சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி விவசாயிகள், நில உரிமையாளர்கள், எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, 8 வழி சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது எனவும், நில உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி சிவஞானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தும் நீதிபதி பவானி சுப்பராயன், மதுரைக் கிளையில் இருந்தும் காணொளி காட்சி மூலம் விசாரித்தனர்.
அப்போது, 8 வழி சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,125 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைதுறை அறிவிப்பாணை வெளியிட்டிருப்பதாகவும், நிலங்களை கையகப்படுத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது ..
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திக்கேயன், நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே பிறப்பித்த அறிவிப்பாணைக்கும், இதற்கும் தொடர்பில்லை என்றும், இது புதிதாக பிறப்பித்த அறிவிப்பாணை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையின் தொடர்ச்சியா என்பது குறித்தும், இதனால் ஏற்படும் தாக்கம் குறித்தும் டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில், 8 வழி சாலை திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபி சி ஐ டி – எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தி ஜனவரி 25ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,