நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் சுமார் 41.2 லட்சம் சேமிப்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) சுமார் 41 கோடி சேமிப்புக் கணக்குகளைக் கொண்டுள்ளது. இதில், குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டாயமாக வைத்திருப்பதற்கான வங்கிக் கணக்குகள் 25 கோடியாகும். அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, செயல்படாத வங்கிக் கணக்குகள் மூடப்பட்டும் வருகின்றன. அவ்வாறாக 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வரையில் மொத்தம் 41.2 லட்சம் சேமிப்புக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எஸ்பிஐ வங்கி அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவர் பிப்ரவரி 28ஆம் தேதி எஸ்பிஐ வங்கியிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலாகவே இந்த விவரங்கள் கிடைத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் வாயிலாக நமக்குத் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் செய்பவர்களிடம் 2017 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இவ்வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் வசூலித்து வருகிறது. அதன்படி, பெரு நகரங்களில் ரூ.3,000, நகரங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப் புறங்களில் ரூ.1,000 என குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 13ஆம் தேதி இந்த இருப்புத் தொகை வரம்பு அவ்வங்கியால் 75 சதவிகிதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.�,