கம்ப்யூட்டர் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலத்திலும் டைப்ரைட்டருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறையவில்லை என்பதை நிரூபிக்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள தி போர்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம். 1919ஆம் ஆண்டு இரண்டு டைப்ரைட்டர் எந்திரங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இப்போதும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. இது குறித்து தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
தி போர்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார் மாதவன் குட்டி. இந்த நிறுவனம் 100 ஆண்டுகள் கடந்ததையொட்டி, வரும் 12ஆம் தேதியன்று அங்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார் உரிமையாளர் சுப்பிரமணியம். இவரது வயது 62.
“எனது தாத்தா அப்பு தான் இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டைத் தொடங்கினார். உறவினர் பொன்னு அம்மாள் என்பவருக்காக இதைத் தொடங்கினார். அவர் வருமானம் பெற உதவினார். அரசுப் பணியில் இருந்த அப்பு, ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் இதை நடத்தத் தொடங்கினார். வெறும் இரண்டு டைப்ரைட்டர்கள் இருந்த இதே கட்டடத்தில் தற்போது 20 டைப்ரைட்டர்கள் உள்ளன” என்று கூறுகிறார் சுப்பிரமணியம். கம்ப்யூட்டர்கள் கைக்குள் இருந்தாலும், வேகமாக டைப் செய்வதற்கு டைப்ரைட்டிங் பயிற்சி அவசியம் என்று தெரிவிக்கிறார் இவர்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் போன்ற வேலைகளில் சேர விரும்புவோர் வேகமாக டைப் செய்வதற்காக இங்கு பயிற்சி பெறுகின்றனர். பல ஆண்டுகளாகப் பெண்களும் சிறுமிகளும் மட்டுமே தங்களிடம் பயில அதிகளவில் வருவதாகக் கூறுகிறார் சுப்பிரமணியம். தற்போது திருவனந்தபுரத்தில் மட்டும் 150 டைப்ரைட்டிங் கல்வி நிறுவனங்கள் இருந்துவருகின்றன. இதுவே 100 ஆண்டுகள் கடந்த தி போர்ட் டைப்ரைட்டிங் கல்வி நிறுவனத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது.�,