uஒரு பிரியாணி உணவு இனிப்பாக மாறுகிற அனுபவம்!

Published On:

| By Balaji

இல. சண்முகசுந்தரம்

டெலிவரி பாய்ஸ் எனப்படும் பொருள் விநியோகப் பணியாளர்கள் பிரச்சினைகளை ஒரு கதைக்குள் கொண்டுவந்து உண்மையைச் சொல்லும் ஒரு குறும்படம் ‘ஸ்வீட் பிரியாணி’. பிரியாணி ஸ்வீட்டாக இருக்குமா? அசைவ உணவின் காரம், மணம் இவற்றின் மீது தீராத காதல் கொண்டு அடிக்கடி அதைச் சுவைத்தாலும் ஒரு குறிப்பிட்ட சூழல் அதை இனிப்பாக மாற்றிக்காட்டுவதை நாமும் அனுபவிக்க முடிகிறது.

ஃபுட்டி எனும் ஒரு ஆன் லைன் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்கிறவன் மாரிமுத்து. காதில் எப்போதும் இயர்போன் மாட்டியபடி வாடிக்கையாளர்களுடனும் நிர்வாகத்துடனும் பேசிக்கொண்டே சாலையில் வண்டி ஓட்டுகிற வேளையில் எந்நேரமும் பதட்டம் இயல்பானதாக இருக்கிறது. அந்தப் பதட்டத்தை வாடிக்கையாளரிடம் காண்பித்துவிடவும் கூடாது.

வாடிக்கையாளர் எப்படி நடந்துகொண்டாலும் நியாயமாய் எழும் உணர்வோடு கூட அந்த ஊழியர் பேசிவிடக்கூடாது என்பதாக இருக்கும் பணிச்சூழல் அநீதியைப் படம் பேசும் விதம் யதார்த்தம். அத்தோடு நின்றிருந்தால் இது ஒரு நல்ல படம் – அவ்வளவே. ஆனால் அதைத் தாண்டி-

உணவைக் கொண்டு வருகிறவர்கள், கால் டாக்சி ஓட்டுகிறவர்கள் போன்றோரின் சாதியை, மதத்தைக் கேட்டு அவமதிக்கிற வன்மம் நாடெங்கும் நடமாடுவதை அவ்வப்போது செய்திகளாகப் பார்த்திருக்கிறோம். எதிர்பாராத ஒரு காட்சியிலிருந்து அந்த வன்மத்தையும் காட்டுகிற படம் சிறப்பானதொரு சமூக அக்கறைப் படைப்பாப்பாக உயர்கிறது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படாததற்கு அவர்களது ஊதிய நிலை மட்டுமல்ல, சாதிய நிலையும் மிக முக்கியக் காரணம் என்பது படத்தின் மையச் செய்திகளில் ஒன்றாக டெலிவரி செய்யப்படுகிறது. .

உணவு ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர், ஏற்கெனவே தான் குறிப்பிட்டிருந்த இடத்திலிருந்து பத்து நிமிடத் தொலைவில் இருக்கும் விளையாட்டு மைதானத்திற்குக் கொண்டு வரச்சொல்கிறார். அந்த இடம் வரையில் வாகனத்தில் சென்றால் நிர்வாகம் தொழிலாளரைக் கண்காணிக்கும், கேள்வி கேட்கும். ஆனால், கேஷ் ஆன் டெலிவரி எனச் சொல்லப்படும் உணவைக்கொடுத்த பின் பணத்தைப் பெறும் ஆர்டரில் பணம் வாங்க வேண்டி, கதையின் நாயகன் அங்கே சென்றாக வேண்டும். அங்கே மாரிமுத்துவுக்குப் பணம் தரப்படவில்லை என்பது மட்டுமல்லாமல் அவன் அடித்துவிரட்டப்படுகிறான். அதற்கான காரணம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது நுட்பமானது.

அலுவலகத்திற்கு போன் செய்து மீதப்பணம் தராமல் ஓடிவிட்டானெனப் பொய் சொல்கிறார்கள். வாடிக்கையாளர் சொல்வதைக் கேள்வியின்றி ஏற்கும் நிர்வாகம், தொழிலாளி சொல்வதைக் கேள்வி கேட்பதோடு, அந்தப் பணம் ஊதியத்தில் பிடித்துக்கொள்ளப்படும் என்று சொல்கிறது.

வீட்டிலிருந்து போன் செய்யும் அம்மாவிடம் கத்துகிறான் நாயகன்.. “யார்கிட்ட திட்டு வாங்கின” என்று பளீரென்று கேட்கிறார் அம்மா. என்ன செய்ய, ஊரில் வாங்கியதையெல்லாம் வீட்டில்தானே கொட்டுகிறோம்!

இதே போன்ற அவமதிப்பு ஏற்படும் இன்னொரு தருணத்தில் மாரிமுத்து எடுக்கும் முடிவு மனிதநேயத்திற்கொரு மகுடம். உணவுப் பார்சலோடு ஒரு அபார்ட்மென்ட் வாயிலருகில் வாகனத்தை நிறுத்துகிறான் மாரிமுத்து. ஒரு தாயும், சின்னப் பையனும் “பசிக்குதுண்ணா” என்று உணவு கேட்டு இவனை வழிமறிக்கிறார்கள். சிறுவன் மாரிமுத்து கையில் தொங்கும் பார்சலை முகர்ந்து பார்ப்பது வறுமையால் விளைந்த பசியின் கோரத்தைக் காட்டுகிறது.

ஐந்து நிமிட தாமதத்தில் உணவைப் பெற்றுக்கொள்கிற வாடிக்கையாளர், “உன்னை மாதிரி நேரத்தின் அருமை தெரியாதவர்களால்தான் இந்தியா முன்னேறாமல் இருக்கிறது,” என்று பேசுவதும், கம்பெனி விதிகள் பற்றி விவாதிப்பதும் பல “மேம்போக்கு” மேதாவிகளின் குரல். அந்த நிமிடத்தில் மாரிமுத்து எடுக்கிற முடிவு சட்டவிதிகளுக்கெல்லாம் உட்படாத, மானுட நியாய விதிகள் நிரம்பியது.

‘நான் கொண்டுசெல்லும் இந்த உணவுக்காக ஒருவரோ, ஒரு குடும்பமோ பசியோடு காத்திருக்கிறது என்ற உணர்வுடன், குறித்த நேரத்திற்குள் கொண்டுபோய்ச் சேர்க்கும் விதியையும் தூக்கிக்கொண்டு,, காதில் மாட்டிய இயர்போன் தகவல்களைக் கேட்டுக்கொண்டே, நெருக்கடி மிகுந்த சாலைகளில் வண்டியை ஒட்டிச்சென்று, பலவகை மனிதர்களுக்கும் உணவைச் சேர்ப்பித்து “ரேட்டிங் போடுங்க” என்று வேண்டுகிறவனிடம், அவனுடைய சாதியை, மதத்தை அறிய முயல்கிறவர்களுக்கிடையே, அவன் சாப்பிட்டானா என்று யாரோ ஒருவர் அன்பாய்க் கேட்கும் சூழலில் அவன் மனம் எப்படி உணரும்? யாரிடமிருந்து தப்பித்து ஓடினானோ அந்த ஏழைத்தாய் இவனிடம், ”நீ சாப்பிட்டியாண்ணா” என்று விசாரிப்பதில் இருக்கிற புரிதலும் அக்கறையும் பிரியாணியை ஸ்வீட்டாக்காமல் விடுமா என்ன?

தோள்களை அசைத்து வித்தியாசமான அசைவோடு நடக்கும் இயல்பு கொண்டவன் நாயகன். அதற்கொரு பின்னணி! அதனாலேயே அவன் எதிர்கொள்ளும் நிலைமைகள்! ஒரு குறும்படத்தில் எவ்வளவு அடர்த்தியான விசயங்கள்!

குறும்படம் என்றாலும் காட்சியமைப்புகள், கச்சிதமான உரையாடல்கள், தேர்ந்த நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, தொகுப்பு நுட்பங்கள் என ஒரு முழு நீளப் படத்திற்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் இயக்குநரும் மற்ற கலைஞர்களும்.

சாலையில் செல்வதையும், பாலத்தில் வேகமாய் பைக்கில் செல்வதையும் கேமரா படமெடுத்த விதத்தில் கதாநாயகனின் பதட்டமும், வேகமும் நமக்குள் ஏறிவிடுகிறது. நாயகன் காதில் ஒலிக்கும் பழைய தமிழ்ப் படப்பாடல்களே, கடக்கப்படும் சாலைகளுக்கான பின்னணி இசையாவது ரசனை மிக்கது. மற்ற காட்சிகளுக்கான பின்னணி இசையும் தனித்துவமானது.

வாடிக்கையாளருக்கு எஜமான மனப்பான்மையை ஏற்படுத்தும் வியாபார நிறுவனங்கள் தனது தொழிலாளர்களை ஏறி மிதித்தே முன்னேறுகிறது. தவறு செய்ய வாய்ப்புக் கிடைக்கும் எல்லா நேரங்களிலும் அத்தவறை செய்துவிடும் மக்கள், ஏதோ ஒரு விதியைக் காரணம் காட்டிக்கொள்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுத்தும் அவலங்களினால் இளையோர் தங்களது சுய மரியாதையையே இழந்துவிட்டுத்தான் வருவாய்க்காக அல்லாடவேண்டியிருக்கிறது.

டெலிவரி பாய்ஸ் போன்றவர்களை இந்த சமூகம் உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை. ஏன் இதெல்லாம் வேலையே இல்லையா? ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று போர்டு மாட்டியிருக்கும் ஒரு முதலாளி, அத்தெய்வத் திருப்பணியைச் செய்யும் தொழிலாளியை மதிப்பதே இல்லையே, ஏன்?

ஒரு அலுவலகத்தில் முதல்நிலை அதிகாரியின் பார்வையில் பார்த்தால், இரண்டாம் நிலையில் இருப்பவர், ஊதியம் முதல் எல்லாவற்றிலும் கீழானவர்தான். அதற்காக அவரை எளிதாக அவமதித்துவிட முடியுமா? ஆனால், தங்களுக்கென அமைப்பு சேர்த்துக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படாதவர்களான இப்படிப்பட்ட பலவகை விநியோகத் தொழிலாளர்களை, படித்த இளைஞர்களை ஏன் நம் சமூகம் மரியாதையுடன் நடத்துவதில்லை?

வேறு என்ன காரணம்? உணவில் கலந்த நஞ்சாக இருக்கும் சாதிதான் காரணம்! நவீன கார்ப்பரேட் கட்டமைப்பிலும் விடாமல் கலக்கப்படுகிற நஞ்சு அல்லவா அது? அந்த நஞ்சு துளியுமின்றி அகற்றப்படுவதல்லவா ஸ்வீட் சமுதாயம்!

இத்தகைய சிந்தனைகளையும் விநியோகித்திருக்கிற இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி மென்மேலும் வெற்றிப்படிகளில் ஏறிட வாழ்த்துகள்.

யார் இவர் என்று விசாரிக்க வைக்கிற அளவுக்கு மாரிமுத்துவைத் தனது இயல்பான நடிப்பால் சந்திக்க வைத்திருக்கிறார் சரித்திரன். அதே போல மற்ற கதாபாத்திரங்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் பாலாஜி வேணுகோபால், சுமதி, நிவ்யா, தீபன், அஹமாப்ரோ ஆகியோர். ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, இசையமைப்பாளர் அருள்தேவ், படத்தொகுப்பாளர் கௌதம் உள்ளிட்ட அனைவரின் பொறுப்புணர்ந்த பங்களிப்பை ‘ஸ்வீட் பிரியாணி’ படத்தின் முழுமையான நேர்த்தியில் உணர முடிகிறது.

இன்று நடைமுறை அனுபவமாகிவிட்ட ‘ஓடிடி பிளாட்பாரம்’ என்ற தளத்தில், மேலுமொரு புதிய கட்டமாக, மாதச் சந்தா செலுத்தாமலே, எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதற்கான ஒரு சிறு கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு, ஒரு நாள் முழுக்க நம் கைப்பேசியிலோ, கணினியிலோ, தொலைக்காட்சித் திரையிலோ எத்தனை முறையும், எத்தனை பேருடனும் படம் பார்க்கிற ஏற்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறது ஆன்வி.மூவி நிறுவனம். சிறந்த படைப்புகள் விரிவான முறையில் மக்களைச் சென்றடைவதற்கு இந்த ஏற்பாடு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

**கட்டுரையாளர் குறிப்பு**

இல. சண்முக சுந்தரம், அக்குபங்சர் சிகிச்சை செய்துவரும் அக்குஹீலர். உடல்நலம், இயற்கை சார்ந்த வாழ்வுமுறை என எழுதியும், செயல்பட்டும் வருபவர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share