தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் தாக்குவதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை முற்றிலும் மூடக்கோரியும் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த 22 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலைக்கான 25 ஆண்டுகால ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் நேற்று முதல் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததோடு, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். “நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது என்பதை உணர மறுத்தால் ‘விபரீத’ விளைவுகளுக்கு யார் பொறுப்பு..? எனக் கேள்வி எழுப்பியதோடு, மக்களே அரசு மக்களுக்காகவே அரசு” எனவும் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முதல் ஆளாய் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்காத வேளையில் துணிந்து குரல் கொடுத்திருக்கிறார்.�,