aவிஸ்வநாதனிடம் வேலை கேட்ட கண்ணதாசன்!

public

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் – இங்கு

மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை – பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!”

கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசிக் கவிதைதான் மேலே உள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்திருந்த தமிழ் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், அவர்களின் குழந்தைகளிடம் பேச முற்படும்போது அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. அப்போது, ஒரு தாள் எடுத்து இந்த நான்கு வரிகளை எழுதி அவர்களிடம் கையளித்தார் கவிஞர். இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை.

இன்று கவிஞரின் 89ஆம் ஆண்டு பிறந்த தினம். பெரிய குடும்பத்தில் பிறந்து, 7000 ரூபாய்க்காக (அன்றைக்கு அது பல கோடி) தத்து கொடுக்கப்பட்டு, சென்னையில் வேலைக்குச் சென்று, பின்னர் கவிதை, திரைப்பாடல்கள் என தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, இன்று காலத்தால் அழிக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் கண்ணதாசன்.

காரைக்குடி சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் பிறந்ததற்கு அடுத்த ஆண்டு, அதே தேதியில் பாலக்காடு எலாபுள்ளி கிராமத்தில் பிறந்தவர் மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன். நான்கு வயதில் இவரின் அப்பா சுப்பிரமணியன் இறந்துவிட, வறுமை தாங்கமுடியாத விஸ்வநாதனின் அம்மா நாராயணீ இவரைக் கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார். கண்ணூர் சிறையில் வார்டனாக இருந்த இவரின் தாத்தா கிருஷ்ணன் வந்து தடுத்ததால் உயிர் தப்பியிருக்கிறார். அதே கிருஷ்ணன், மற்றொரு உருவில் தன்னிடம் தம்மை ஈர்த்துக்கொண்டதாக விஸ்வநாதன் குறிப்பிடுவார். அது கண்ணதாசனைத்தான்!

இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகில் இணைந்துசெய்த சாதனையை இனி, எந்த ஒரு பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் செய்துவிட முடியாது. இந்த இருவரும் தற்போது நம்மோடு இல்லாமல் இருந்தாலும், தமிழ் திரையுலகில் எண்ணற்ற தத்துவம் மற்றும் அனுபவப் பாடல்களை தமிழ்ச் சமூகத்துக்கு தந்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். இவர்களின் நட்பு பல்வேறு சம்பவங்கள்மூலம் தமிழ் வாசிப்பு உலகத்தில் குறிப்பிடப்பட்டே வந்திருக்கின்றன. காரணம், இவர்களின் ஆத்மார்த்தமான நட்புதான். கண்ணதாசன் இறந்து 35 வருடங்கள் கழித்து மரணத்தைத் தழுவும் தருணம்வரையிலும் அவரை விஸ்வநாதன் குறிப்பிட்டே வந்தார். அவர் கடைசியாகப் பாடிய பாடலாக மொபைலில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படத்தில்கூட கண்ணதாசனைத்தான் குறிப்பிட்டுப் பாடுகிறார் எம்.எஸ்.வி. இவர்களின் பிறந்த நாளன்று இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றில் கண்ணதாசனே, விஸ்வநாதனிடம் வேலை கேட்ட நிகழ்ச்சி.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்‌ஷன் அலுவலகத்தில் வைத்து டியூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.

எம்.எஸ்.வி-க்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார், எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதுகூடத் தெரியாது. அப்போது, செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க, இவர் உடனே “ஐசனோவர் யாரண்ணே” என்று கேட்டார். அப்போது, கண்ணதாசன் “அடே மண்டு, அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்” என்றார்.

அப்போது அங்குவந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டுபேரும் வந்துட்டீங்களா? சரி, சிட்டுவேஷன் என்னன்னா, தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துகிறார். இந்த சிட்டுவேஷனுக்கு பாட்டுப் போடுங்க” என்று சொல்லிவிட்டு உள்ளறையில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷனுக்குப் போய்விட்டார்.

சற்றுமுன்னர், யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. ‘ஐசனோவர்…. ஆவலோவா….’ என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர், “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் டியூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம், இதில் என்ன டியூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று. கவிஞர் கண்ணதாசன் பாடலைச் சொல்லாமல், வெட்டிப்பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. “அண்ணே, சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமுகூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.

அதற்கு கண்ணதாசன், “இதோ பாருடா விசு, ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்ல. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா….!’’ என்றார்.

‘எலிக் காது’ படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார், “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு….? நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?’ என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்:

“இதோ பார் விசு, நம்ம ரெண்டுபேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக்காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் டியூன், நான் சொன்னதுதான் பல்லவி, ஆரம்பி’’ என்றார்.

சரியென்று இறங்கினார்கள். “ஐஸ்னோவர்…. ஆவலோவா…. என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. ‘அண்ணே எஸ்டேட் ஓனர்’ பாலையா வயசானவர், தவிர முதலாளி. ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக் குறைவா தெரியுதே’ என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன், “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம், வேலை கொடு விஸ்வநாதா” என்பதற்குப் பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று தொடங்குவோம் என்றுசொல்லி, மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார். “விஸ்வநாதன் வேலை வேண்டும்” பாடல் உருவாகியது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *