எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (மார்ச் 10) எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்ய தலைநகர் நைரோபியை நோக்கி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 149 பயணிகள் மற்றும் எட்டு கேபின் குழுவினர் என மொத்தம் 157 பேர் இருந்தனர். புறப்பட்ட 6 நிமிடங்களில் இந்த விமானம் அடிஸ் அபாபாவிலிருந்து தென்கிழக்கு திசையில் 60 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. 32 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்த விமானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், விமானத்திலிருந்த 157 பேருமே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சிதைவிலிருந்து பிரேதங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் அதிகபட்சமாகக் கென்யாவைச் சேர்ந்தவர்கள்தான் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 32 கென்ய குடிமக்கள் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கனடாவைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒன்பது பேரும், இத்தாலியைச் சேர்ந்த எட்டு பேரும், சீனாவைச் சேர்ந்த எட்டு பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஏழு பேரும், பிரான்ஸைச் சேர்ந்த ஏழு பேரும், எகிப்தைச் சேர்ந்த ஆறு பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஐந்து பேரும், இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருந்த நான்கு பேரும், ஏழு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவத்துக்கு உலகம் முழுவதிலும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.�,