‘விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போனார்’ என்று கூறப்பட்டு வந்த நிலையில், அத்தகவல் பொய் என்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்திய ராணுவத்தைத் தோற்றுவித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. அவர் எப்படி இறந்தார் என்பது தெளிவாக தெரியாத நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த இதுவரை 3 கமிட்டிகளை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது. ஷா நவாஸ் (1956) மற்றும் கோஷ்லா (1970) கமிட்டிகள், ஆகஸ்ட் 18, 1945ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவித்தன.
அதேவேளையில் முகர்ஜி (1999) கமிட்டி, விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறக்கவில்லை என்று தனது முடிவை சமர்ப்பித்தது. எனினும், இதை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. இந்நிலையில், பாரிஸைச் சேர்ந்த வரலாற்றுவியலாளரான ஜெ.பி.பி.மோர் என்பவர் பிரான்ஸ் தேசிய காப்பகத்தில் இருந்து ரகசிய குறிப்பு ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். டிசம்பர் 11, 1947 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ள அதில், விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றும் 1947ஆம் ஆண்டு வரை அவர் உயிருடன் இருந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய காப்பகத் தகவல்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குறிப்பில், ‘சுபாஷ் இந்திய சுதந்திர லீக்கின் முன்னாள் தலைவர்’ என்றும் ‘ஜப்பானின் ஹிகரி கிகான் அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார்’ என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியாவில் இருந்து அவர் தப்பித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக பிரிட்டன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் கூறிய நிலையிலும் பிரான்ஸ் இந்த விவகாரத்தில் அமைதியையே கடைப்பிடித்து வருகிறது. விமான விபத்தில் சுபாஷ் இறந்தார் என்பதை பிரான்ஸ் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.�,