டாக்ஸிவாலா திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியானதால், விஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் சூர்யா.
அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ் மட்டுமின்றி, இந்தியிலும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான நோட்டா படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
கீதா கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. ராகுல் சங்கிரிட்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரியங்கா ஜவால்கர், மாளவிகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (நவம்பர் 16) வெளியாகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. படம் ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியானதால், படக்குழுவினர் மட்டுமின்றி, திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது.
இதனையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக “நான் சோர்வடையும்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவது யார் தெரியுமா? நீங்கள் தான். எல்லாக் கூச்சல்களுக்கு நடுவிலும், உங்கள் அன்பு எனக்குச் சத்தமாகக் கேட்கிறது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதை ரீ ட்வீட் செய்துள்ள நடிகர் சூர்யா, “எங்கள் அனைவரின் அன்பும் உங்களுக்குண்டு. இதுவும் கடந்து போகும். ஆனால், நீங்கள் இங்கு நிலைத்திருக்கப் போகிறீர்கள். டாக்ஸிவாலா படத்தை எதிர் நோக்குகிறேன்” என ஆறுதல் தரும் வகையில் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது படம் வெளியான அன்றே இணையதளங்களில் வெளியாவதுதான். அப்படி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தை வெளியான முதல் நாளன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டரில் அறிவித்திருந்தது. அதே போல் படம் வெளியான முதல் நாளன்றே முழு படத்தையும் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதே போல் 2.0 திரைப்படத்துக்கும், அறிவிக்கப்பட்டு பின் மறுக்கப்பட்டது. தொடர்ந்து இணையத்தில் படங்கள் வெளியாகும் இப்பிரச்சினை, எப்போது தீரும் என்ற கேள்வி பல நாட்களாகவே திரையுலகில் தொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.�,”