�
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 47 ரயில்களில் சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்தும், 101 ரயில்களில் சிறப்புக் கட்டணத்தைக் குறைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
2016ஆம் ஆண்டில், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் ஃபிளெக்ஸி பேர் என்ற சிறப்புக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜ்தானி ரயில்களிலும், 52 துரந்தோ ரயில்களிலும், 46 சதாப்தி ரயில்களிலும் இது அமல்படுத்தப்பட்டது.
இந்த சிறப்புக் கட்டணமானது, 10 முதல் 50 சதவிகிதம் வரை பயணிகள் தேர்வு செய்யும் வகுப்புகளுக்கு ஏற்றவாறு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு 15 பிரீமியம் ரயில்களில் சிறப்புக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தும், 32 ரயில்களில் பண்டிகை நாட்கள் அல்லாத சாதாரண நாட்களில் சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
101 ரயில்களில் வசூலிக்கப்பட்டு வரும் சிறப்புக் கட்டணத்தில் தற்போது 1.4 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி குறைந்து காணப்படும் 15 ரயில்களில் சிறப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இத்தகவலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ”படுக்கைகள் 50 சதவிகிதத்துக்குக் குறைவாக நிரம்பும் 15 ரயில்களில் சிறப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பெறலாம். படுக்கைகள் முழுமையாக நிரம்புவதால் ரயில்வேயும் பலன் அடையும்” என்று அவர் கூறியுள்ளார்.�,